மாதுளை நம் நண்பன்

நன்றி குங்குமம் தோழி

மாதுளை முத்துக்களை செந்நிறம், ரோஸ் நிறம், வெண் முத்துக்கள் என காணலாம். இதை பழமாகவோ சாறாகவோ பருகுவர். பச்சிளங்குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மாதுளம் முத்துக்களை கொதிநீரில் போட்டு, நன்கு பிசைந்து, வடிகட்டிய நீரில் தேன் விட்டு, பாலாடையில் புகட்ட, மருந்து உணவாக செயல்படும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் பழமிது.

எந்த வயதினரும் உண்ணலாம். இது ரத்த ஓட்டம் சீராக்கும். ரத்தத்தை சுத்தமாக்கும் திறன் கொண்டது. அஜீரணம் நீக்கும். வாதம், பித்தம், கபம் நீக்கும் நோய் நிவாரணி இது. உடலில் ஏற்படும் வீக்கம், கைகால் வலி, அசதி, முகச்சுருக்கம் நீக்கி மேனி எழிலை வழங்கிடும். ரத்தசோகை, ரத்த அழுத்தம் சரி செய்யும். இதய நோய் வராமல் பாதுகாக்கும். ஞாபக மறதியை விரட்டும்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் இப்பழம் உண்பது சிறப்பு. இருமல், நீரிழிவு, களைப்பு போக்கி ஆரோக்கியம் தரும். சுறுசுறுப்புக்கு உதவும். புளிப்பு மாதுளை குடல்புண், வயிற்றுக்கடுப்பு, ரத்த பேதியை விரட்டும். நீர் சுருக்கு வராமல், புற்றுநோய் வருமுன் காக்கும். இரும்பு, சுண்ணாம்பு, நீர்ச்சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ், தாது உப்பு, உயிர்ச்சத்து தன்னுள் கொண்ட சுவையான பழமிது.  

சத்துக்கள் நிரம்பியது இப்பழம் மட்டுமல்ல, இம்மரப்பட்டை, பழத்தோல், பூ, இலை என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. பழத்தோல் கஷாயம், பழத்தோல் துவையல் வயிற்றுப்பூச்சியைக் கொல்லும். எக்காலத்திலும் கிடைக்கும் மாதுளம்பழம் நம் நண்பன். நல்ல பயன் தரும் இதை உண்டு மகிழ்வோம்.

- சு.கெளரிபாய்,

பொன்னேரி.

Related Stories: