நிலம் எல்லோருக்கும் சொந்தம்

நன்றி குங்குமம் தோழி

‘‘ஒரு பிடி மண்ணை உன்னால் உருவாக்க முடியாது. பிறகு எப்படி உன்னால் நிலத்துக்கு ஒரு விலையை நிர்ணயிக்க முடிகிறது? உரிமை கொண்டாட முடிகிறது? அந்த உரிமையை யார் உனக்குக் கொடுத்தது? கடவுளா கொடுத்தார்? அப்படியென்றால் அந்தக் கடவுளுக்கு யார் கொடுத்தது? இந்த நிலம் எல்லோருக்கும் சொந்தம். அதற்கு யாரும் விலை நிர்ணயிக்கவோ, உரிமை கொண்டாடவோ முடியாது...’’

- டால்ஸ்டாய்

பிறந்து, வளர்ந்து, ஓடியாடி, விளையாடிய நிலம் தன் கண் முன்னாலேயே பறிக்கப்படுவதைப் பார்த்து, அதை தடுக்கமுடியாமல் நிராதரவாய் நின்ற ஒரு அப்பாவிப் பெண்ணின் கதைதான் ‘லெமன் ட்ரீ’.இஸ்ரேலிய எல்லைப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தன்னந்தனியாக வசித்து வருகிறாள் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சல்மா. ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவள் ஒரு விதவை.

அவளின் மகன் அமெரிக்காவில் பணிபுரிகிறான். மகள் திருமணம் முடிந்து நகரத்தில் வசிக்கிறாள். வீட்டின் முன்பு மஞ்சள் படர்ந்திருக்கும் எலுமிச்சை தோட்டம் தான் சல்மாவின் ஒரே சொத்து. பரம்பரை பரம்பரையாக அந்த தோட்டத்தைப் பாதுகாத்து வருகிறது சல்மாவின் குடும்பம். மகன் தன்னுடன் வந்து அமெரிக்காவில் இருக்கச் சொன்னபோதும், அதைப் பொருட்படுத்தாமல் உதவியாளர் ஒருவருடன் சேர்ந்து எலுமிச்சைத் தோட்டத்தைப் பராமரிப்பதில் சல்மாவின் அன்றாட நாட்கள் நகர்கின்றன.

அப்பாவின் கைப்பிடித்து நடை பழகியது முதல் அழுது புரண்டது வரை சல்மாவின் இன்ப, துன்ப நினைவுகள் எல்லாம் அந்த எலுமிச்சைத் தோட்டத்துக்குள் பொதிந்திருப்பதால் சொத்து என்பதைத் தாண்டி அதன் மீது தனிப் பாசம் கொண்டிருக்கிறாள் சல்மா. அதனால் மரத்திலிருந்து எலுமிச்சைகளைப் பறிக்காமல், கீழே விழுவதை மட்டும் எடுத்து ஊறுகாய் போட்டு விற்பனை செய்கிறாள்.

எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அவளின் வாழ்க்கை சென்றுகொண்டிருந்த போது, இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் சல்மாவின் வீட்டுக்கு அருகில் குடும்பத்தோடு குடிபெயர்கிறார். அது சல்மாவின் வாழ்வையே தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது. எதிரிகள் எலுமிச்சைத் தோட்டத்தின் வாயிலாக ஊடுருவி அமைச்சரைத் தாக்கலாம் என்று புரளி கிளம்புகிறது.

அதனால் ‘எலுமிச்சைத் தோட்டம் அமைச்சரின் பாதுகாப்பிற்குத் தடையாக உள்ளது. உடனே அதை அகற்ற வேண்டும்’ என்று மேலிடத்திலிருந்து சல்மாவுக்கு உத்தரவு வருகிறது. வெட்டப்படும் எலுமிச்சை மரங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றும் அதில் சொல்கின்றனர். அடுத்த நாளே சல்மாவிடம் கேட்காமல் கூட எலுமிச்சைத் தோட்டத்தைச் சுற்றி யாரும் நுழைய முடியாதபடி முள் கம்பி வலைப்பின்னல் போடப்படுகிறது.

மீறி நுழைபவர்களைச் சுடுவதற்காக உறங்காமல் கண்விழித்து காத்துக்கிடக்கிறார்கள் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள். இரவு நேரத்தில் ராணுவ வீரர்கள் கண் அயரும்போது சல்மா தன் தோட்டத்துக்குள் நுழைந்து, தன் எலுமிச்சை மரங்களை வாஞ்சையுடன் தொட்டுப் பார்த்து மௌனமாக கதறுகிறாள். வாடிப்போயிருக்கும் எலுமிச்சை மரங்களுக்கு நீர் பாய்ச்சி ஆறுதலடைகிறாள்.

தவிர, தன்னுடைய மரங்கள் வெட்டப்படுவது கனவில் வந்து அவளின் உறக்கத்தை தொந்தரவு செய்கிறது. அதிகாரத்தை எதிர்த்து தனியொரு மனுஷியாக களத்தில் குதிக்கிறாள். தனக்கு நேர்ந்திருக்கும் அநீதியைக் குறித்து உள்ளூர் தலைவர்களிடமும், இஸ்ரேலிய ராணுவத்திடமும் முறையிடுகிறாள். யாரும் சல்மாவின் பக்கத்தில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்வதில்லை.

தவிர, ‘பணத்தை வாங்கிட்டு அமைதியாய் இரு. அதுதான் உனக்கு நல்லது...’ என்று சல்மாவிற்கு அறிவுரை வேறு சொல்கிறார்கள். நிலைகுலையும் சல்மா, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை எல்லா படிகளையும் ஏறி இறங்குகிறாள். யாரும் அவள் வழக்கை எடுத்து வாதாட வருவதில்லை. அப்போது சல்மாவுக்கு உதவ ஒரு இளம் வழக்கறிஞன் முன் வருகிறான்.

அவனுக்கு சல்மாவின் மீது ஒருவித மயக்கம் உண்டாகிறது. தன் மகனின் வயதிருக்கும் அவனின் உதவி தேவையிருப்பதால் சல்மாவும் அவனை வேண்டா வெறுப்புடனே அணுகுகிறாள். சுற்றியிருப்பவர்கள் இருவரையும் இணைத்து கதை கட்டுகிறார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் தோட்டத்தை மீட்டெடுப்பதில், அதைக் காப்பாற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறாள் சல்மா.

மந்திரியின் மனைவியிடம் தன் நிலையைச் சொல்லி நியாயம் கேட்கிறாள். சல்மாவின் கஷ்டங்களைப் புரிந்துகொண்ட மந்திரியின் மனைவி, சல்மாவின் பக்கமிருக்கும் நியாயத்துக்காக போராடுகிறார். அவர் மூலம் ஊடகமும் சல்மாவுக்குத் துணைபுரிகிறது. ஆனாலும் அதிகாரத்தின் முன் நீதி, சல்மாவின் போராட்டம் எல்லாமே பொய்த்துப்போகிறது.

இறுதியில் வெட்டப்பட்ட எலுமிச்சை மரங்களும், தன் தோட்டத்தை இழந்த சல்மாவும், மந்திரியின் மனைவியும் அதிகாரத்தின் பலிகடாக்களாக நமக்குக் காட்சியளிப்பதோடு படம் முடிகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடையேயான பிரச்சனையைக் கோடிட்டுக் காட்டி, பாலஸ்தீனியர்களின் நிலம் இஸ்ரேலியர்களால் எப்படி பறிக்கப்படுகிறது என்பதை துணிச்சலுடன், எந்தவித ஒளிவுமறைவுமின்றி நேரிடையாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் இரான் ரிக்லிஸ். இவர் இஸ்ரேலியர் என்பது தான் இதில் ஹைலைட்.

சல்மாவாக நடித்தவரின் நடிப்பில் அவ்வளவு இயல்பு. தோட்டத்தை இழக்கப்போகும் துயரை, கையறு நிலையை மெல்லுணர்வு வழியாக முக அசைவிலேயே வெளிப்படுத்தி அசத்துகிறார். எலுமிச்சைத் தோட்டத்தின் அழகை, நிலத்தில் எலுமிச்சை விழுவதை அருகிலிருந்து பார்த்து உணருவதைப் போல படமாக்கியிருக்கிறது கேமரா. வெட்டப்பட்ட மரத்திலிருந்து கிளைவிடும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கை நம் மனதில் துளிர்விடுகிறது. சல்மாவின் மனதிலும் அதுவே!

-த.சக்திவேல்

Related Stories: