வலைப்பேச்சு

நன்றி குங்குமம்

@pachaiperumal23 - பத்து ரூபாய் நாணயத்தோடு கடைக்கு போவது பாஸ்போர்ட், விசா இல்லாம பாகிஸ்தான் எல்லைக்குள்ள போன மாதிரியே திகிலா இருக்குப்பா...

@saravankavi - செத்துப் போனவங்களை வச்சு அரசியல் கட்சிகள் ஓட்டு கேட்ட காலம் போய் செத்துடாம இருக்கணும்னா ஓட்டு போடுன்னு கேட்கற காலத்துல இருக்கோம்!

@Firdaus_Tweetz - உங்கள் மனசாட்சியைத் தவிர வேறு எதையும்  கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமில்லை..!

@saraa_cbe - முப்பது வயசுக்கு மேல ரோல் மாடல் தேடாதீங்க... ரெண்டு பேருக்காவது ரோல் மாடலா இருங்க!

@HAJAMYDEENNKS - ‘காய்கறிகள், பழங்களை தண்ணீரில் கழுவினால் பூச்சிக்கொல்லி மருந்துகள் போகாது... அதற்கென தனியாக மருந்து வாங்கி கழுவ வேண்டும்’ என விளம்பரம் பண்றாங்க. அடேய் அந்த மருந்தும் கெமிக்கல்தானேடா!

@ividhyac - காயப்போட்ட துணிகளை எடுத்தபின் பெய்யும் மழையானது பேரழகு!

@AnandNodal - பணி ஓய்வு பெற்ற கணவன் - “எப்படி எல்லாம் சுத்தி வேல செஞ்சவன் தெரியுமா..? இப்படி அடைச்சு வெச்சு வீட்டு வேலையே செய்ய சொல்றியே!?” என்று சொன்ன கணத்தில் உணர்ந்தான்... தன் மனைவியின் ‘35 வருட சிறையை!’

@Aravind01431 - காலையில் சீக்கிரம் எழுந்து பேப்பர் போடும் பையனுக்கு சீக்கிரம் எழுவதில் கஷ்டம் தெரியாது... அவனுக்கு தெரிந்தது எல்லாம் குடும்ப கஷ்டம் மட்டுமே..!

@teakkadai1 - ரொம்ப வருசமா அட்மிசன் college driven ஆக இருந்தது. சில வருசமா முக்கியமா... இந்த வருசம் அதிகமா course driven. உதாரணமா பிஎஸ்ஜி-யில் CSE/IT முடிஞ்சிருச்சு. ஆனா, மற்ற டிபார்ட்மெண்ட்லாம் இருக்குன்னாலும் ‘வேணாம் ஏதோ ஒரு காலேஜ்ல CSE போவோம்’ என்கிறார்கள்.

@Kaalachakram Narasimmaa Tan - எனது தந்தை சித்ராலயா கோபு திரைப்படங்களில் எழுதிய நகைச்சுவைகள் ஒருபுறம் இருக்க, திரைக்குப் பின்னால்  படப்பிடிப்பின்போது நிகழும் நகைச்சுவை சம்பவங்களைப் பற்றி விவரிக்கும்போது சிரிப்பை அடக்க முடியாது. அப்படித்தான், தான் எழுதி இயக்கிய ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தில், நடிகர் சுருளிராஜனுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையேயான ஒரு பிரச்னையைப் பற்றிக் கூறினார். படம் என்ன, தயாரிப்பாளர் யார் என்பதைக் குறிப்பிடாமல், சம்பவத்தை மட்டும் கூறுகிறேன்.

அந்த தயாரிப்பாளர் ஒரு பிரபல நடிகையின் தம்பி. சித்ராலயா கோபு எழுதி இயக்கிய அந்த நகைச்சுவைப் படத்தில் மனோரமா, சுருளிராஜனுக்கு மிகவும் முக்கிய பங்கு. தயாரிப்பாளர் அனைவருக்குமே அட்வான்ஸ் கொடுத்திருந்தார். அதற்குப்பின் அவரது லெதர் பாகின் ஜிப் திறக்கவேயில்லை. பணம் தராமல் இருக்க எல்லா காரணங்களையும் கூறுவார். அஷ்டமி, சந்திராஷ்டமம், பாங்க் போக நேரமில்லை, இன்றைக்கு வெள்ளிக்கிழமை, லெதர் பாக் ஜிப் சிக்கிக்கொண்டு விட்டது திறக்க முடியவில்லை என்று புதிது புதிதாக காரணங்களைக் கூறுவார். ஆனால், படப்பிடிப்பு மட்டும் வெகு வேகமாக நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பார். நடிகர் சுருளிராஜனுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. அன்று அவருக்கு முக்கியமான காட்சிகள் இருந்தன. படப்பிடிப்புக்கு புறப்படுவதற்கு முன்பாக நேராக எங்கள் வீட்டிற்கு வந்து, அப்பாவுடன் காரிலேயே படப்பிடிப்புக்கு போனார்.

‘‘கோபு சார்! அவசரமாக திருச்சி போகணும். ஒரு குடும்ப பிரச்னை. பணம் தேவைப்படுகிறது. எனக்கு தயாரிப்பாளர் கிட்டே இன்னைக்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரமாவது வாங்கிக் கொடுங்க. இல்லேனா நான் மேக்கப்  போட்டுக்க மாட்டேன்!’’ என்றார் சுருளிராஜன். படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றவுடன், அப்பா தயாரிப்பாளரை அழைத்தார். ‘‘சார்! பாவம் சுருளிக்கு பெரிய பிரச்னை. திருச்சிக்கு போகவேண்டுமாம். பணம் இல்லேனா அவரு இன்னைக்கு நடிக்க மாட்டார்!’’ என்று கோபு சொல்ல, அடுத்த நிமிடம் ஆச்சரியம் கோபுவுக்கும், சுருளிக்கும். தயாரிப்பாளர், தனது லெதர் பாகைத் திறந்து, சுளையாக ஐந்தாயிரம் ரூபாயை எடுத்து சுருளி கையில் வைத்தார். ‘‘சுருளிராஜன் சார்! கவலைப்படாதீங்க. உங்க சீன்களை நடிச்சுக் கொடுத்துருங்க. இன்னைக்கு மத்தியானம், நானே திருச்சிக்கு போறேன். உங்களை என் காரிலேயே கொண்டு விட்டுடறேன்’’ என்றார்.

சுருளிக்கு ஒரே குஷி! கிடுகிடு என்று காட்சிகளை அமர்க்களமாக மனோரமாவுடன் நடித்துக் கொடுத்துவிட்டு, கோபுவிடம் விடைபெற்றுக் கொண்டு, தயாரிப்பாளர் காரிலேயே திருச்சிக்கு பயணமானார்அன்றிரவு பதினோரு மணிக்கு, சுருளிராஜனிடம் இருந்து அப்பாவுக்கு போன். ‘‘என்ன சுருளி? திருச்சி போய்ச் சேர்ந்துட்டீங்களா? பிரச்னை தீர்ந்ததா?’’ என்றார் சித்ராலயா கோபு.‘‘என் பிரச்னையை விட்டுத் தள்ளுங்க கோபு சார்! இந்த கொடாக்கண்டன் தயாரிப்பாளரை எங்கேயிருந்து பிடிச்சு வந்தீங்க?’’ என்று கேட்க, கோபுவுக்கு திகைப்பு‘‘என்னாச்சு சுருளி?’’ என்றார் கோபு. ‘‘தயாரிப்பாளர் காலையில ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தாரா? அதை வாங்கி என் பையில வச்சுக்கிட்டு, அவரோட கார்ல திருச்சிக்கு போனேன்  இல்லையா?  செங்கல்பட்டுகிட்டே வரச்சே, கோபுவோட ஊரு என்று சொன்னவாறு, திடீர்னு ஆயிரம் ரூபாய் கொடுங்க, காருக்கு பெட்ரோல் போடணும், திருச்சி வந்ததும் கொடுத்துடறேன். இப்போ என்கிட்டே சில்லரையில்லேனு சொன்னாரு!  சரினு ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அப்புறம் டிபன், லஞ்ச் எல்லாத்துக்கும் என்னைத்தான் கேட்டாரு. எல்லாத்துக்கும் நான்தான் கொடுத்தேன்.  

விழுப்புரம், உளுந்தூர்பேட்டைனு வண்டியை நிறுத்தி, பழம் வாங்கறது, காய்கறி வாங்கறதுனு எல்லாத்துக்கும் பணம்கேட்டாரு. திருச்சி வந்தப்புறம் கொடுத்துடப் போறாருனு கொடுத்துட்டேன். கடைசியில திருச்சி வந்ததும், என்னை இறக்கிட்டு லெதர் பாகோட ஜிப்பைத் திறந்தார். என்னோட அஞ்சாயிரம் ரூபாயை தரப்போறாருனு ஆவலோடு நின்னேன். கொஞ்சம் புகையிலையை வாயில அடக்கிக்கிட்டு, ‘வரேன் சுருளி சார்!  எனக்கு நல்ல கம்பெனி கொடுத்தீங்க! டிரைவர் வண்டியை எடு’ன்னு சொல்லிட்டு கிளம்பிப் போயிட்டாரு. கடைசியில கையில தம்புடி இல்லாம நான் திருச்சியில் நின்னதுதான் மிச்சம்! எனக்குத் தெரிஞ்ச ஒரு மளிகைக்கடைக்காரர்கிட்டே கடன் வாங்கிட்டு, குடும்பப் பிரச்னையைத் தீர்த்துக்கிட்டு, சென்னை வந்து சேர்ந்தேன்...’’ என்றார் சுருளி.  படம் நன்றாக ஓடியது. ஆனால் தயாரிப்பாளர், அப்பாவுக்கு பேசிய முழுத்தொகையைக் கொடுக்கவில்லை.அதன்பிறகு சுருளி அப்பாவை எங்கே சந்தித்தாலும், ‘‘சார்! நான் திருச்சிக்கு போகணும்னா, என்னோட காருல கூட இனிமே ஏற மாட்டேன்!’’ என்றாரே பார்க்கலாம்!

@நேசமித்ரன் - நட்சத்திரங்கள் பேசாத நாட்களில்தான் தவளைகள் பாடத் துவங்குகின்றன...

@Pa Raghavan - இந்த இலக்கியம் - கமர்ஷியல் வித்தியாசங்கள் ஆதிகாலத்திலேயே இருந்திருக்கிறது. எக்காலத்துக்கும் ஏற்புடையதை ஸ்ருதி என்றும் சீக்கிரம் செத்துவிடக்கூடியதை ஸ்மிருதி என்றும் இனம் பிரித்து வைத்தார்கள். மனு என்பவர் பண்டைய கமர்ஷியல் எழுத்தாளர். அவரை இழுத்து வைத்து அடித்துக்கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம்?

@Parthiban Gowthamaraj - உங்க தலைக்கும், தாடிக்கும் என்ன ஆயில் போடுறீங்க, ஜீ? நீங்க பிரதமர் ஆனதும் நாடு கண்ட ஒரே வளர்ச்சி

அதுதான்!

@Gokul Prasad - காலையிலிருந்து ஓடிடி தளத்தில் ஆறு படங்கள் பார்த்து விட்டேன். ஒவ்வொன்றிலும் அரைமணி நேரம். எந்தப் படமும் ஆர்வமூட்டும் வகையில் இல்லாததால் அந்தந்த படங்களின் மீதிக் கதையை விக்கிப்பீடியாவில் தேடிப் படித்தேன். அவற்றிற்கு எழுதப்பட்ட விமர்சனங்களை வாசித்தேன்.

எனது புல்லறிவுக்கு எட்டியவரை எதுவுமே சகிக்கவில்லை. அந்தப் படங்களின் கதைகளும் அவை படமாக்கப்பட்ட விதமும் சோகை பீடித்து பரிதாபகரமாக இருந்தன. இப்போது ஏழாவது படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பத்து நிமிடங்கள்கூட கடந்திருக்காது. ‘அட போங்கப்பா’ என சலித்துப்போய் இந்தப் பதிவை தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். என்னிடம்தான் கோளாறா? இந்த நாள் இனிய நாள்.

@Sen Balan - ஒரு பேச்சுக்கு அது டைனோசர் முட்டைன்னே வச்சுக்குவோம். அது எப்படி தமிழனின் பெருமையாகும்? கஷ்டப்பட்டு முட்டை போட்ட டைனோசருக்குத்தானே பெருமை?

@அ. பாரி - பிள்ளை இரண்டை பெற்றுக்கொள், உடற்பயிற்சிக்கென்று தனியே நேரம் தேவையில்லை ஒப்புக்கொள்!

@Ramanujam Govindan - ‘துஞ்சுபுலி இடறிய சிதடன் போல்’ எனத் தமிழ் இலக்கியங்களில் ஒரு உவமை உண்டு. அதாவது தூங்கிக் கொண்டிருக்கும் புலியை மிதித்த குருடன் போல் என அர்த்தம். மனைவியே மறந்துவிட்ட ஒரு சண்டையை மீண்டும் நினைவுபடுத்துவது ‘தூங்கும் டைனோசரை’ மிதிப்பதற்குச் சமம்!

Related Stories: