வேளாண் சட்டங்களை நிராகரிக்க ராஜஸ்தானில் மசோதா தாக்கல்: பஞ்சாப்பை தொடர்ந்து அதிரடி

ஜெய்ப்பூர்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை நிராகரிப்பதற்காக, ராஜஸ்தான் சட்டப்பேரவையிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த செப்டம்பர் மாத இறுதியில், மத்திய அரசு 3 சர்ச்சைக்குரிய புதிய வேளாண் சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்தது. இதற்கு, நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் இன்னும் நீடித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த சட்டங்களை நிராகரித்து, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மசோதா நிறைவேற்றும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார்.

அதன்படி, பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் சமீபத்தில் இந்த வேளாண் சட்டங்களை நிராகரித்து, முதல்வர் அமரீந்தர் சிங் தீர்மானம் நிறைவேற்றினார். தற்போது, இந்த மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் வேளாண் சட்டங்களை நிராகரிப்பதற்காக நேற்று 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றின் மீது விவாதம் நடத்தப்பட்டு திங்கட்கிழமை நிறைவேற்றப்படும் என தெரிகிறது. பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் மாற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளும் அடுத்தடுத்து இதுபோன்ற மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>