×

நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் தேர்தல் 8.6 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிப்பு: 3ம் தேதி மகுடம் சூடப்போவது யார்?

நியூயார்க்: உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்னும் 2 நாளில் நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய வாக்குப்பதிவில் இதுவரை 8.6 கோடி பேர் வாக்களித்துள்ளனர். வரும் 3ம் தேதி நடக்கும் தேர்தலில் ஜெயிக்கப் போவது டிரம்பா, பிடெனா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் 46வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 3ம் தேதி நடக்க உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த உடனே அன்றைய தினமே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

இம்முறை ஆளும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடெனும் போட்டியிடுகின்றனர். இறுதிகட்ட பிரசாரங்கள் அனல் பறந்த நிலையில், நவம்பர் 3ம் தேதியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்கு முன்பாக, முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை அமெரிக்கர்களில் நிறைய பேர் பயன்படுத்தி உள்ளனர். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 8.60 கோடி பேர் தேர்தல் தேதிக்கு முன்பாகவே வாக்களித்து விட்டனர். இது 2016ல் பதிவான மொத்த வாக்குகளில் 58 சதவீதமாகும். இம்முறை கிட்டத்தட்ட 15 கோடி அல்லது 16 கோடி பேர் வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவு முடிந்ததும், முதலில் நேரில் வாக்களித்தவர்களின் ஓட்டுகள் எண்ணப்படும். அதன் பிறகு தபால் ஓட்டுகள், முன்கூட்டியே வாக்களித்தவர்களின் ஓட்டும் எண்ணப்படும். இம்முறை ஏராளமானோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதால், தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு, பொருளாதார சீர்குலைவு என பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் நடக்கும் இத்தேர்தலில் வெல்லப்போவது அதிபர் டிரம்ப்பா அல்லது எதிர்க்கட்சியின் பிடெனா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

* தனக்கு தானே வெற்றி அறிவிப்பா?
முன்கூட்டி வாக்களித்தவர்களை வைத்து நடத்தப்பட்ட கணிப்புகளில், டிரம்ப்பை விட பிடெனுக்கு சற்று ஆதரவு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனாலும், இந்த வித்தியாசம் பெரிய அளவில் இல்லை. அதே சமயம், நவம்பர் 3ம் தேதி நேரில் வாக்களிக்கக் கூடிய மாகாணங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். அதில் டிரம்ப்புக்கு 44.1 சதவீத வாக்குகளும், பிடெனுக்கு 32.2 சதவீத வாக்குகளும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் டிரம்ப் 2வது முறையாக வெற்றி பெற்று தனக்கு தானே அதிபராக அறிவித்துக் கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

* டிக்-டாக்கை நிறுத்திய டிரம்ப் உத்தரவுக்கு தடை
சீனாவை சேர்ந்த டிக்-டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு சில மாதங்களுக்கு முன் இந்தியா தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவிலும் இந்த செயலிக்கு தடை விதிக்க, அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். வரும் 12ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. இந்நிலையில், இதை எதிர்த்து பென்சில்வேனியாவை சேர்ந்த நகைச்சுவை நடிகர் டக்லாஸ் மார்லாண் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இதை நேற்று முன்தினம் விசாரித்த மாவட்ட நீதிபதி, டிரம்ப் நிர்வாகத்தின் டிக்டாக் தடை உத்தரவை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.  

யாருக்கு எவ்வளவு ஆதரவு?
* கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ஆன்லைனில் 71 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
* அதில், 51 சதவீத மக்கள் பிடெனுக்கு ஆதரவாகவும், 43 சதவீதம் பேர் டிரம்ப்புக்கு ஆதரவாகவும் பதிலளித்துள்ளனர்.
* ஆசிய அமெரிக்கர்களில் 65 சதவீதம் பேர் பிடெனுக்கும் 28 சதவீதம் பேர் டிரம்ப்புக்கும் ஆதரவு கூறி உள்ளனர்.
* கறுப்பினத்தவர்களில் 86 சதவீதம் பேர் பிடெனுக்கும், 9 சதவீதம் பேர் மட்டுமே டிரம்ப்புக்கும் ஆதரவு கூறி உள்ளனர்.
* வெள்ளையினத்தவர்களில் 49 சதவீதம் ஆதரவு டிரம்ப்புக்கும், 45 சதவீத ஆதரவு பிடெனுக்கும் உள்ளது.
* பெண்களின் ஆதரவு 55 சதவீதம் பிடெனுக்கும், 39 சதவீதம் டிரம்ப்புக்கும் உள்ளது.
* ஆண்கள் ஆதரவு பிடெனுக்கு 47 சதவீதம், டிரம்ப்புக்கு 48 சதவீதம்.
* கல்லூரி பட்டம் பெறாதவர்கள் 57 சதவீதம் டிரம்ப்பை கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கின்றனர். பட்டம் பயின்றவர்களில் 58 சதவீதம் பேர் பிடெனை ஆதரிக்கின்றனர்.


Tags : election ,US , 8.6 crore people turn out for US presidential election tomorrow: Who will be crowned on the 3rd?
× RELATED தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு...