×

மதுரை கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்த சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு: தமிழக அரசுக்கு கடிதம்

சென்னை: தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐஏஎஸ் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இவர் மதுரை கலெக்டராக இருந்தபோது, கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்து தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர். தமிழ்நாடு அறிவியல் நகர துணை தலைவராக தற்போது பதவி வகித்து வருபவர் சகாயம் ஐஏஎஸ். இவர் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்து தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளான சகாயம் ஐஏஎஸ், அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டு முக்கியம் இல்லாத தமிழ்நாடு அறிவியல் நகர துணை தலைவர் பதவியில் கடந்த 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தார்.

`மக்கள் பாதை’’ என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வருகிறார். இந்நிலையில், அரசு பதவியில் இருந்து ஓய்வுபெற விஆர்எஸ் கேட்டு தமிழக அரசுக்கு சகாயம் ஐஏஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இவருக்கு தற்போது 57 வயது ஆகிறது. இன்னும் 3 ஆண்டுகள் ஐஏஎஸ் பணியில் நீடிக்க முடியும். ஆனால், தமிழக அரசு தனக்கு தொடர்ந்து முக்கிய பதவிகள் எதுவும் வழங்காமல், தன்னை உதாசீனப்படுத்துவதாக கருதி அவர் விஆர்எஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது. விஆர்எஸ்-க்கு விண்ணப்பித்துள்ள சகாயம் ஐஏஎஸ் இன்னும் இரண்டு மாதங்களில் அரசு பதவியில் இந்து விடுவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு ஏன்?: சகாயம் ஐஏஎஸ் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது, 2012ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி தமிழக தொழில் துறையின் முதன்மை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “மதுரை மாவட்டத்தில் இயங்கும் பல கிரானைட் குவாரிகள் சுமார் ரூ.16 ஆயிரம் கோடிக்கு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேட்டுக்கு தமிழ்நாடு கனிமவளங்கள் லிமிடெட் நிறுவனத்தின் சில அதிகாரிகள் கிரானைட் கம்பெனிகளின் விதிமீறல்களுக்கு துணைபோனதாக குற்றம்சாட்டி இருந்தார்”. பின்னர் மதுரை மாவட்ட கலெக்டர் பதவியில் இருந்து தமிழக அரசால் 2012ம் ஆண்டு சகாயம் அதிரடியாக நீக்கப்பட்டார்.

ஆனால், இந்த பிரச்னையை உயர் நீதிமன்றத்துக்கு சென்றபோது கிரானைட் சம்பந்தமாக விசாரணை நடத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய சகாயம் ஐஏஎஸ் தலைமையில் குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இவரும் விசாரணை நடத்தி 600 பக்க அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் கிரானைட் முறைகேட்டில் தமிழக அரசு அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உள்ளது. பல தொழில் அதிபர்கள் முறைகேடாக அனுமதித்த அளவை விட அதிக அளவு கிரானைட் வெட்டி எடுத்து பல கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளனர் என்றும், இது தொடர்பாக சிபிஐ-யின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த பிரச்னையில், தமிழக அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்காததால் கிரானைட் முறைகேடு கிடப்பில் போடப்பட்டது. அதேநேரம், மதுரை கிரானைட் முறைகேடுகளை அம்பலப்படுத்திய சகாயம் ஐஏஎஸ் அதிகாரியும், முக்கியத்துவம் இல்லாத பதவியான, `தமிழ்நாடு அறிவியல் நகர துணை தலைவராக’’ பணியமர்த்தப்பட்டார். நேர்மையாக செயல்பட்ட ஒரு அதிகாரியின் கைகள் 6 ஆண்டுகளாக கட்டப்பட்ட நிலையில், தற்போது அவர் விருப்ப ஓய்வு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணை தலைவராக சகாயம் நியமிக்கப்பட்டார். இந்த துறையில் 9 பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள். இது ஐஏஎஸ் அதிகாரிக்கான துறையே கிடையாது. ஆனாலும், இவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதவியில் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கொரோனா காலத்தில்கூட பல்வேறு மாவட்டங்களுக்கு ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் சகாயம் புறக்கணிக்கப்பட்டார். பல மூத்த அதிகாரிகளைவிட இவருக்கு சம்பளம் குறைவாக வருகிறது. இதுகுறித்து அரசுக்கு நினைவூட்டியும் சரியான பதில் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் பிரான்சில் நடைபெற்ற தமிழ் கலாசார மன்ற ஆண்டு விழாவில் பங்கேற்க செல்ல, தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் தலைமை செயலாளர், பொதுத்துறை அதிகாரிகள் தேவையில்லாத கேள்விகளை கேட்டு, அனுமதி வழங்காமல் புறக்கணித்துள்ளனர். இப்படி பல பிரச்னைகளை சந்தித்ததால் சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு கேட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Sakayam ,Madurai ,IAS ,Government of Tamil Nadu , Sakayam who brought out the Madurai granite scandal IAS voluntary retirement: Letter to the Government of Tamil Nadu
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...