×

சென்னை-கன்னியாகுமரி தொழில்வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் அரசின் உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: சென்னை -கன்னியாகுமரி தொழில்வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் அரசின் உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சென்னை-கன்னியாகுமரி தொழில்வழி சாலை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பல்வேறு சாலைகள் அடங்கிய இந்த திட்டத்தில் சேலம் மாவட்டம் மோகனூர்-நாமக்கல்-சேந்தமங்கலம்-ராசிபுரம் ஆகிய இடங்களில் சாலைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாலை விரிவாக்கத்தின்போது நாமக்கல் மாவட்டம் அக்கியாம்பட்டி கிராமத்தில் உள்ள சில வீடுகளை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, வீடுகளை கையகப்படுத்த ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்குமாறு சேலம் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி (நிலம் கையகப்படுத்துதல்) கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். அதன் அடிப்படையில் வீடுகளின் உரிமையாளர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஆஜராகி தங்கள் ஆட்சேபனைகளை தெரிவித்து மனு கொடுத்தனர். அந்த மனுக்களை நிலம் கையகப்படுத்தும் அதிகாரியான மாவட்ட வருவாய் அதிகாரி நிராகரித்து ஜூன் 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, நிலங்களை அரசுடமையாக்கி தமிழக நெடுஞ்சாலை துறை ஜூலை 7ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், ஆட்சேப மனுக்களை நிராகரித்ததை எதிர்த்தும், நிலங்களை அரசுடமையாக்கியதை எதிர்த்தும் அக்கியாம்பட்டியை சேர்ந்த லெனின்குமார் நடேசன் உள்ளிட்ட 9 வீட்டு உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணை வந்தது. அப்போது, வீட்டிற்கு எதிரில் உள்ள அரசு நிலத்தை திட்டத்திற்கு பயன்படுத்தாமல், குடியிருக்கும் வீடுகளை கையகப்படுத்துவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர்கள் குறிப்பிடும் நிலத்தை கையகப்படுத்தினால் திட்டத்தின் பாதையை மாற்ற வேண்டியதாகிவிடும். மனுதாரர்களில் 6 பேர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். அவர்கள் வீடுகள் இருக்கும் இடத்தில் கொஞ்ச நிலம் மட்டுமே பட்டா நிலம்.

அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி, மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட பின்னர்தான் விதிமுறைகளை முறையாக பின்பற்றி அரசுடமையாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், “நிலம் கையகப்படுத்தும் அதிகாரி ஆட்சேபங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் அரசுக்கு அனுப்ப வேண்டும். இதை நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளது. ஆனால், நீதிமன்ற அறிவுறுத்தலையும் மீறி நிலம் கையகப்படுத்தும் அதிகாரியே மனுதாரர்களின் ஆட்சேப மனுக்களை நிராகரித்துள்ளார். நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்தும் விதிகளின்படி கையகப்படுத்தும் அதிகாரிக்கு விசாரணை நடத்த மட்டுமே அதிகாரம் உள்ளது. விசாரணை நடத்தி அந்த அறிக்கையை அரசிடம் அவர் சமர்ப்பிக்க வேண்டும். அதை அரசு ஆய்வு செய்து உரிய முடிவை எடுக்க வேண்டும்.

ஆனால், இந்த விஷயத்தில் அரசும் தனது கவனத்தை செலுத்தாமல் இயந்திரத்தனமாக உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுபோன்ற முக்கிய திட்டங்களை அமல்படுத்துவதற்காக நிலம் கையகப்படுத்துவது அவசியம் என்ற போதிலும், அதற்கான விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஒரு குடிமகன் தன் ஆயுட்கால முதலீடான வீட்டை பறிகொடுத்து வேறு வீட்டை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நில உரிமையாளர்களின் ஆட்சேபங்களை தீவிரமாக பரிசீலித்திருக்க வேண்டுமே தவிர, இயந்திரத்தனமாக நிராகரித்திருக்க கூடாது. எனவே, ஆட்சேபங்கள் நிராகரித்தது மற்றும் அரசுடைமையாக்கியது ஆகிய இரு உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் அதிகாரி மனுதாரர்களின் ஆட்சேபனை தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அவற்றை தமிழக அரசு கவனத்துடன் மனதை செலுத்தி உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தையும் 12 வாரத்தில் முடிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

Tags : Government ,cancellation ,Kanyakumari ,Chennai ,High Court , Govt quashes land acquisition order for Chennai-Kanyakumari industrial road project: HC
× RELATED கோணம் அரசு பொறியியல் கல்லூரியில்...