பொல்லாத ஆட்சியை ஒழித்து திமுகவின் பொற்கால ஆட்சியை அமைப்போம்: காஞ்சி முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை

சென்னை: பொல்லாத ஆட்சியை ஒழித்து திமுகவின் பொற்கால ஆட்சியை அமைப்போம் என்று காஞ்சி முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் வடக்கு-தெற்கு மாவட்டம் சார்பில், நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி வாயிலாகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: சில நாட்களுக்கு முன்னால் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், அண்ணாவையே விமர்சித்து பேட்டி கொடுத்தார். பத்து நாள் ஆகிவிட்டது. இதற்கு அதிமுக சார்பில் ஏதாவது விளக்கம், மறுப்பு வருமா என்று பார்த்தேன். வரவில்லை.

அண்ணா பெயரை கட்சியின் பெயரில் இருந்து நீக்கி விட்டு, கொடியில் இருந்து படத்தை நீக்கி விட்டு, அண்ணா காலத்தோடு முடிந்து விட்டது என்று ஜெயக்குமார் சொல்லட்டும். அது பற்றி நான் கவலைப்படவில்லை. அண்ணாவின் பெயரையும் பயன்படுத்திக் கொண்டு பாஜவின் பாதம் தாங்கிகளாக எதற்காக குப்புற விழுந்து கிடக்க வேண்டும். அண்ணாவின் இறுதி லட்சியமாக இருந்தது மாநில சுயாட்சிக் கொள்கை ஆகும். மறைவுக்கு முந்தைய மாதம் அவர் அதிகம் எழுதியதும் மாநில சுயாட்சியை பற்றித்தான். எனவே மாநில சுயாட்சி என்பது அண்ணாவின் உயில் என்று சொல்லப்படுகிறது. அந்தக் கொள்கைக்கு உலை வைக்கும் ஆட்சி தான் இன்றைய அதிமுக ஆட்சி.

மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநருக்கு அனுப்பி வைத்த மசோதா என்னாயிற்று என ஆளும் கட்சி கவலப்படவில்லை. அப்போதெல்லாம் அமைதியாக இருந்தார்கள். திமுக கொடுத்த அழுத்தத்தாலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் விடுத்த வேண்டுகோளாலும், ஆளுநர் 45 நாள் தாமதத்திற்குப் பிறகு அந்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார். இறுதியில் வென்றது சமூக நீதி தான்!. அதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.

மருத்துவக் கல்விக்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று மத்திய அரசு சொல்லிவிட்டது. ஆனால் திமுக இதனை வேடிக்கை பார்க்கவில்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்துக என்று பிரதமருக்கு நான் கடிதம் அனுப்பி உள்ளேன். ஆனால் இவை எது பற்றியும் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லை. உண்மையைச் சொன்னால் அவர் ஜாலியாக இருக்கிறார். நாம் மறுபடி ஆட்சிக்கு வரப்போவது இல்லை.

இருக்கும் ஆறு மாதத்தை நன்றாக அனுபவிக்கலாம் என்று எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார். மக்களால் அவர் முதல்வர் ஆனவர் அல்ல. அதனால் மக்களைப் பற்றிய எந்தக் கவலையும் அவருக்கு இல்லை. ஆனால் நம்மை, அண்ணாவோ, முத்தமிழறிஞர் கலைஞரோ அப்படி வளர்க்கவில்லை. தமிழ்நாட்டில் எந்தப் பகுதிக்கும், எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் மக்களைச் சந்திக்கும் துணிச்சல் எனக்கு உண்டு. ஏனென்றால் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதும் மக்களின் குரலை எதிரொலித்தோம். நாம் ஆட்சியில் இல்லை என்று அமைதியாக இருந்திருக்க முடியும். ஆனால் மக்கள் துன்பப்படும் போது அதனை கைகட்டி வேடிக்கை பார்க்கும் இயக்கம் நாம் அல்ல. நம்மால் அப்படி இருக்க முடியாது.

ஆனால் கொரோனா தடுப்பூசி வந்தால் அதனை இலவசமாக போடுவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். மக்களைக் காப்பாற்றுவது அரசாங்கத்தின் கடமை. அந்தக் கடமையைக் கூட விலை பேசுகிறார் பழனிசாமி. முதல்வர் பதவியை விலை கொடுத்து வாங்கியவர் அப்படித்தான் பேசுவார். கொரோனாவை விடக் கொடிய இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கோட்டையில் இருக்கும் கொள்ளையர் கூட்டத்தை விரட்டியாக வேண்டும். பத்தாண்டு கால பாதாளத்தில் இருக்கும் தமிழகத்தை மீட்டாக வேண்டும். அண்ணாவின் ஆட்சியை அமைத்தாக வேண்டும்! முத்தமிழறிஞர் கலைஞரின் ஆசையை நிறைவேற்றியாக வேண்டும்!. அதற்கு நாம் அனைவரும் முன்பைவிட வேகமாக உழைத்தாக வேண்டும். அண்ணாவின் பெயரையும் பயன்படுத்திக் கொண்டு பாஜவின் பாதம் தாங்கிகளாக எதற்காக குப்புற விழுந்து கிடக்க வேண்டும்.

Related Stories: