வட்டிக்கு வட்டிச் சலுகை திட்டத்தில் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம்: முத்தரசன் குற்றச்சாட்டு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் 24 முதல் நாடு முடக்கம் செய்யப்பட்டது. இதனால் தொழில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. வர்த்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. இந்த நெருக்கடியான முடக்க காலத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வட்டிச்சலுகை அளிக்க முடியாது என பிடிவாதமாக மறுத்து விட்டன. வட்டித் தள்ளுபடி இல்லை எனினும் வட்டிக்கு வட்டி வசூலிப்பதை எந்த வகையிலும் ஏற்க இயலாது என உச்ச நீதிமன்றம் குரல்  உயர்த்திக் கூறியது.

இதனைத் தொடர்ந்து வட்டிக்கு வட்டி வசூலிப்பதில்லை என ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் அறிவித்தன. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் வட்டிக்கு வட்டி  சலுகை விவசாயம் மற்றும் அது தொடர்பான தொழில்களுக்குப் பொருந்தாது என்று அறிவித்துள்ளது. இதனால் உணவுப்பயிர்,  தோட்டக் கலைப்பயிர் மற்றும் பணப்பயிர் சாகுபடிக்கும், டிராக்டர், பவர் டில்லர் போன்ற விவசாய இயந்திரங்கள் வாங்கவும் கடன் பெற்ற விவசாயிகளும், கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மீன்பிடி தொழில் போன்ற விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவோர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இது, விவசாயிகள் மற்றும் அது தொடர்புடைய தொழில் செய்வோர்களை வஞ்சிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதனை மறுபரிசீலனை செய்து, கடன் பெற்றோர் அனைவருக்கும் 6 மாத கால வட்டிச் சலுகை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: