புல்வாமா தாக்குதல் பின்னணியில் பாக். இருப்பது உறுதியாகி விட்டது அழுக்கு அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

கவாடியா: ‘புல்வாமா தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தானே முன் நின்று நடத்தியது என்ற உண்மை, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற விஷயங்களில் அழுக்குபடிந்த அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்,’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த கோபத்தின் காரணமாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படைகள் குண்டு வீசி அழித்தன. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. ஆனால், எதிர்க்கட்சிகள் அதை நிராகரித்தன. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் பவாத் சவுத்ரி, ‘புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலானது பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து அடித்துள்ளோம். இந்த வெற்றியில் உங்கள் அனைவருக்கும் பங்குண்டு,’’ என்றார். இதன் மூலம், புல்வாமா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது அந்நாட்டின் நாடாளுமன்றத்திலேயே நிரூபணமாகி உள்ளது. இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் 145வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம், கவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி நேற்று மலர்தூவி மரியாதை செய்தார்.

பின்னர், அவர் பேசியதாவது: புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் கூறப்பட்ட தேவையற்ற அறிக்கைகளை இந்த நாடு மறக்காது. நாடு மிகப்பெரிய வேதனையால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்த நேரத்தில், சுயநலம் மற்றும் ஆணவத்துடன் கூடிய அழுக்குபடிந்த அரசியல் தாண்டவமாடியது. ஆனால், தற்போது புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்த உண்மை, நமது அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், புல்வாமா தாக்குதல் குறித்து உண்மைக்கு மாறாக பேசியவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை வைத்து செய்யப்பட்ட அரசியலானது, தங்களது அரசியல் ஆதாயத்திற்காக எந்த வரம்பையும் அவர்கள் தாண்டுவார்கள் என்பதை காட்டும் விதத்தில் இருந்தது. அப்படிப்பட்ட அரசியல் கட்சிகளை நான் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இனியும், நம் பாதுகாப்பு படையினரின் மனஉறுதியை பாதிக்கும் விதமான அரசியலில் ஈடுபட வேண்டாம். தெரிந்தோ, தெரியாமலோ கூட தேச விரோத சக்திகளுடன் கைகோர்ப்பதை தவிர்க்க வேண்டும். தற்போதைய சூழலில் அனைத்து நாடுகளும், அனைத்து அரசுகளும், பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட அனைத்து மக்களும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். தீவிரவாதமும், வன்முறையும் யாருக்கும் நல்லதல்ல. தீவிரவாதத்தினால் ஏற்படும் வலியை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது. எனவே, தீவிரவாதத்திற்கும், அதை ஆதரிப்பவர்களுக்கும் எதிராக இந்த உலகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* முதல் கடல் விமான சேவை தொடக்கம்

கவாடியாவில் பிரதமர் மோடி நேற்று, நாட்டின் முதல் கடல் விமான சேவையையும் தொடங்கி வைத்தார். ஒற்றுமை சிலை அமைந்துள்ள கவாடியில் இருந்து சபர்மதி நதிக்கரை வரை இந்த கடல் விமானம் இயக்கப்படும். இந்த விமானம் வானிலும் பறக்கும், கடலிலும் பயணிக்கும். இரட்டை இன்ஜின் கொண்ட இந்த விமானத்தின் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்தார்.

* இந்த விமானம் 19 இருக்கைகள் கொண்டது.

* ஒரே நேரத்தில் 14 பேர் பயணம் செய்யலாம்

* ஓற்றுமை சிலைக்கு தினமும் 8 முறை இயக்கப்படும்.

* இதில் பயணிக்க ரூ.4,800 கட்டணம் வசூலிக்கப்படும்

* ஒற்றுமை சிலைக்கு 40 நிமிடத்தில் செல்ல முடியும்.

Related Stories: