×

விழிப்புணர்வு வாரத்திலும் கைநீட்டி சிக்கும் அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் 62% பேர் லஞ்சம் கொடுத்தே காரியம் சாதிப்பு: கூட்டமைப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சேலம்: மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் ‘லஞ்சம் கொடுக்க வேண்டாம், லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்,’ என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 27ம்தேதி முதல், நவம்பர் 2ம் தேதி (நாளை) வரை ‘லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இதற்காக ‘விழிப்பான இந்தியா, செழிப்பான இந்தியா’ என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து லஞ்சம் ஊழலுக்கு எதிரான கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:

டிரான்ஸ்பரன்சி ஆப் இந்தியா என்ற அமைப்பு கடந்தாண்டு இறுதியில் வெளியிட்டுள்ள ஆய்வுகளில் இந்தியாவில் அரசு அலுவலகங்களில் 56 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த நிலையில், நடப்பாண்டில் அது 51சதவீதமாக குறைந்துள்ளது தெரியவந்தது. ஆனால் தமிழகத்தில் லஞ்சம் கொடுத்தவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது தமிழக அரசு அலுவலகங்களில் 62சதவீதம் பேர், தங்கள் வேலையை செய்ய, லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இதில் 35 சதவீதம் பேர் பலமுறையும், 27 சதவீதம் பேர், ஒன்று அல்லது இரண்டு முறையும் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஆன்லைன் ஆக்கப்பட்டாலும், இங்கு தான் அதிகபட்சமாக 41சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர். அடுத்தபடியாக நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் 19சதவீதம் பேரும், காவல்நிலையங்களில் 15சதவீதம் பேரும், மின்சார வாரியத்தில் இணைப்புகளை பெறுவதற்கும், கேபிளை பழுதுபார்ப்பதற்கும் லஞ்சம் கொடுப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் சிக்குவதும், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுவதும் மிகுந்த வேதனைக்குரியது.

லஞ்சமும், ஊழலும் எங்கு, எப்போது தொடங்கியது? என்ற கேள்விக்கு விடையே இல்லை. ஆனால் இவை இரண்டும் ஒவ்வொரு தனிமனிதரோடு, நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் தடைக்கல்லாக அமைந்து விடும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. விரும்பியதை விரும்பிய நேரத்தில் பெறுவதற்கான ஒரே வழியாக லஞ்சம் உள்ளது. இதுதான் ஒரே வழி அல்லது சுலபமான வழி என்ற மக்களின் எண்ண ஓட்டமே இதற்கு காரணம். இங்கு லஞ்சம் கொடுத்து எந்த காரியத்தையும், சாதிக்க கூடாது என்ற விழிப்புணர்வு 100சதவீதம் இருந்தால் மட்டுமே அதனை ஒழிக்க முடியும். அதே நேரத்தில் 90சதவீத மக்களிடம் லஞ்சம் வாங்கி சிக்கும் 10சதவீத அரசு ஊழியர்களுக்கு வேலை பறிப்பு, பணியிறக்கம் போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்தால், உரிய பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் வரும் ஆண்டுகளிலும் இந்த அவலம் அதிகரிக்கும். இவ்வாறு கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறினர்.

Tags : government offices , Officers reach out during Awareness Week 62% bribe government officials: Conflict study shocks
× RELATED அரசு அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்