வானமே எல்லை

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

காஷ்மீர் என்றாலே நினைவுக்கு வருவது பனி படர்ந்த மலைகளும், நடுங்கும் குளிரும், ரம்மியமான அழகும்தான். உயர்ந்த மலைகளுக்கு நடுவே கிளம்பும் பனிப் புகையில் ஆங்காங்கே காஷ்மீரில் எல்லைப்பகுதிக்கே உரித்தான  பதற்றமும் உண்டு. பதற்றத்திற்கும் பனி மலைகளுக்கும் நடுவே சத்தமின்றி ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் இராம் ஹபீப். காஷ்மீர் இஸ்லாமியப் பெண்களில் முதல் விமானப் பைலட்டாகத் தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் இராம் ஹபீப். வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்ற கையோடு, ஒன்றரை ஆண்டு ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்திருக்கிறார். இந்நிலையில் இவரின் கனவான விமான ஓட்டுநர் பயிற்சிக்கு அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள விமான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் இருந்து அழைப்பு வர, அதில் இணைந்திருக்கிறார். பயிற்சியை வெற்றிகரமாக முடித்து 2016-ல் நாடு திரும்பியதோடு, தற்போது டெல்லியில் ஓட்டுநர் உரிமத்திற்கான பயிற்சி வகுப்பில் இருக்கிறார்.

மிகச் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இராம் ஹபீப், ‘‘காஷ்மீர் பெண் விமானம் ஓட்டுகிறாரா என அனைவருமே என்னை ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர். பயிற்சியின்போதும், என் சக மாணவர்கள், காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் விமான ஓட்டுநராகப் போவது ஆச்சர்யம்தான் என என்னிடம் தெரிவித்தனர். ஆனால், பயிற்சியின்போது என்னிடம் எந்தவித பாகுபாடும் காண்பித்ததில்லை. எனது கடுமையான உழைப்பு, விடாமுயற்சி காரணமாகத் தனியார் ஏர்லைன்ஸில் ஓட்டுநராகப் பணியாற்றப்போகிறேன்.

எனது கனவு நனவாகும் இத்தருணம் மிகவும் ஆனந்தமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றார். இராம் ஹபீபின் அப்பா மருத்துவமனைகளுக்கு உரிய அறுவை சிகிச்சைகளுக்கான உபகரணங்களை விநியோகிக்கும் தொழில் செய்கிறார். நீலவான ஓடையில் நீந்த வாழ்த்துகள்..!!

-மகேஸ்வரி

Related Stories: