×

தமிழகத்தில் இயல்புநிலை திரும்பியும் போதுமான அளவுக்கு பொது போக்குவரத்து இல்லை

* அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு
* பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் பாதிப்பு

தமிழகத்தில் இயல்புநிலை திரும்பியும் போதுமான அளவுக்கு பொதுபோக்குவரத்து இல்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக  அத்தியாவசிய பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதால், அவற்றின் விலை மேலும் உச்சம்தொட வாய்ப்புள்ளதாக பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தினசரி சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் சார்பில் 3,439 பஸ்கள்; மாவட்டங்களில் இயக்கப்படும் நகரப்பேருந்துகள்-6,636; புறநகர் பேருந்துகள்-7,842; மலைப்பகுதி பேருந்துகள்-497 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் மாநிலத்திற்குள்-615 பஸ்கள்; வெளிமாநிலங்களுக்கு-467 என மொத்தமாக 19,496 பஸ்கள் இயங்கப்பட்டது. இதுதவிர உபரி பேருந்துகள்-1448 உள்ளன. இதேபோல், தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தில் ரயில்சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் ஆகிய இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக சாதாரண, சிறப்பு, எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு 56க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.
மேலும் சென்னை, எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு 18க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டது. இதேபோல், புறநகர் ரயில்கள் 120க்கும் மேற்பட்டவை இயக்கப்பட்டது. இவை செங்கல்பட்டு-தாம்பரம்; செங்கல்பட்டு-அரக்கோணம்; வேளச்சேரி-சென்னை கடற்கரை; சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களுக்கு பயணித்தன.

இதேபோல் சென்னையில் 32 மெட்ரோ ரயில்நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலமாக சென்ட்ரல், எழும்பூர், கிண்டி, விமானநிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயணித்து வந்தனர். இதற்குள் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அரசு பஸ்கள், ரயில்கள், மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டது. பிறகு, கொரோனா பரவல் தமிழகத்தில் படிப்படியாக குறையத் துவங்கியது. இதனால் பல்வேறு பிரிவுகளில் தொடர்ந்து தளர்வு வழங்கப்பட்டது. ஆனால் பொதுபோக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பாக எவ்விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உடனடியாக சேவையினை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அரசு மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல், செயல்பட அனுமதித்து உத்தரவிட்டது. அதன்படி மாவட்டத்திற்குள்ளான பேருந்துகள் சேவை துவங்கியது. மற்றொருபுறம் தெற்கு ரயில்வே, மெட்ரோவும் தங்களது சேவைகளை துவங்கின. ஆனால் சேவை துவங்கப்பட்டவுன் தொற்று பயத்தின் காரணமாக பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தயக்கம் காட்டினர். இதனால் பஸ், ரயில், மெட்ரோ சார்பில் குறைவான அளவு சேவையே வழங்கப்பட்டது. மேலும் அப்போதைய நிலைக்கு பொதுமக்களுக்கும் சம்மந்தப்பட்ட சேவையே போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் இயல்புநிலை திரும்பியுள்ளது. இருப்பினும் குறைவான சேவையே ெதாடர்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருக்கும் அலுவலகங்கள் அனைத்தும் செயல்படத் துவங்கிவிட்டது. இதேபோல் அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், வணிகமும் வழக்கம் போல் நடக்கிறது. ஆனாலும் ெபாதுபோக்குவரத்து சேவை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதாவது அரசுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. சென்னையில் மின்சார ரயில்களில் சேவை இன்னும் துவங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்கு பணிக்கு வருகிறார்கள். அவர்கள், அலுவலகம், தொழிற்சாலை, கடை, நிறுவனங்கள், கட்டுமானபணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு மின்சார ரயில்சேவை இல்லாதது பெறும் சிக்கலை சந்திக்கச்செய்துள்ளது.  இதன்காரணமாக மக்கள் அரசு பஸ்களில் கூடுதல் செலவு செய்து வருகின்றனர். மேலும் ஷேர் ஆட்ேடாக்களிலும், இருசக்கர வாகனங்களிலும் பணிக்கு வருகின்றனர். ஏராளமானோர் இருசக்கர வாகனங்களை தற்போது பயன்படுத்துவதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான விவசாயிகள், வணிகர்கள் அத்தியாவசிய பொருட்களை மின்சார ரயில்களில் தான் கொண்டு வந்து சென்னையில் விற்பனை செய்வது வழக்கம். அவர்களும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்களது பொருட்களுக்கு கூடுதல் விலை கொடுத்து சரக்கு ஆட்டோக்களில், மினிவேன்களிலும் கொண்டுவர வேண்டிய நிலை உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால் அவற்றின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக, அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ெபாருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு, இது மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தரப்பினரும் மின்சார ரயில் சேவையை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதில் தெற்கு ரயில்வே மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே ரயில் சேவையை மீண்டும் துவங்கியுள்ளது. இதேபோல் பொருளாதாரத்தை புதுப்பிக்கும் வகையில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுபோக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பொதுமக்களின் நலன் கருதி மாநில அரசு ஏற்கனவே மின்சார ரயில், நகர்புற ரயில் சேவையினை மீண்டும் துவங்குவதற்கு செப்டம்பர் 2ம் தேதியில் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சேவையை தொடங்குவது பொதுமக்களுக்கு பெரிதும் உதவும். எனவே சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சார ரயில் மற்றும் புறநகர் ரயில்களில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்னும் சேவை தொடங்கப்படவில்லை. இதேபோல் மெட்ரோ ரயிலை பொறுத்தவரை 30க்கும் மேற்பட்டவையே இயங்குகிறது.

தமிழகத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் வழக்கம்போல் அரசு பஸ், ரயில், மின்சார ரயில், மெட்ரோ ரயில்களை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் மக்கள் சிரமம் இல்லாமல் பயணிக்க முடியும். மேலும் தமிழகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் கைகொடுக்கும். எனவே இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான விவசாயிகள், வணிகர்கள் அத்தியாவசிய பொருட்களை மின்சார ரயில்களில் தான் கொண்டு வந்து சென்னையில் விற்பனை செய்வது வழக்கம். அவர்களும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

Tags : Tamil Nadu , By default in Tamil Nadu, there is not enough traffic to return
× RELATED சென்னையில் இயல்புநிலை திரும்பியது: வெயில் அடித்ததால் மக்கள் உற்சாகம்