×

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.167 கோடியில் 329 ஏரிகள் 56 அணைக்கட்டு புனரமைக்க முடிவு: உலக வங்கியிடம் நிதி கேட்டு தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை: ₹167 கோடியில் 329 ஏரிகள், 56 அணைக்கட்டுகள் புனரமைக்கவும், 16 இடங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்க உலக வங்கியிடம் நிதி கேட்டு தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ₹2131 கோடி செலவில் 4778 ஏரிகள் மற்றும் 477 அணைக்கட்டுகள் புனரமைத்தல் உள்ள பணிகளை மேற்கொள்ள கடந்த 2017ல் தமிழக அரசு முடிவு செய்தது.  இத்திட்டத்தில், முதற்கட்டமாக ₹745 கோடியில் 1325 ஏரிகள், 107 அணைக்கட்டுகள், 45 செயற்கை முறை நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ₹649 கோடியில் 906 ஏரிகள், 183 அணைக்கட்டுகள் கட்டுதல், 37 செயற்கை முறை நீர் செறிவூட்டுகள் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு கடந்தாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக, செய்யாறு உபவடிநிலத்தில் 172 குளங்கள், 14 அணைக்கட்டுகள், 1 நீர்வரத்து கால்வாய்கள், 5 கிணறுகள், கும்மிடிப்பூண்டி உபவடிநிலத்தில் 22 குளங்கள், 4 அணைக்கட்டுகள், மணிமுக்தா நதி உபவடிநிலத்தில் 34 குளங்கள், 10 அணைக்கட்டுகள் கட்டுதல், 3 கிணறுகள், வேகவதி உபவடிநிலத்தில் 44 ஏரிகள், 5 கிணறுகள், நம்பியாறு உபவடிநிலத்தில் 40 குளங்கள், 1 நீர்வரத்து கா கால்வாய்கள், பரவனாறு உபவடிநிலத்தில் 5 குளங்கள், 2 அணைக்கட்டுகள், 9 நீர்வரத்து கால்வாய்கள், சின்னாறு உபவடிநிலத்தில் 1 ஏரிகள், 15 அணைக்கட்டுகள், 4 கால்வாய்கள் புனரமைத்தல் என மொத்தம் 9 உபவடிநிலங்களில் ₹167.49 கோடி செலவில் மாநிலம் முழுவதும் 329 ஏரிகள், 56 அணைக்கட்டுகள், 4 கால்வாய்கள், 11 நீர்வளத்து கால்வாய்கள், 16 செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம், 36,893 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், 3வது கட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை உலக வங்கிக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இந்த பணிகளுக்கு உலக வங்கி ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் திட்டப்பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : lakes , Tamil Nadu Irrigation, 329 lakes at a cost of Rs. 167 crore, Government of Tamil Nadu
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர்...