×

பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு மாதம் நீட்டிப்பு பள்ளி, கல்லூரி நவ.16ல் திறப்பு: தியேட்டர்களுக்கு 10ம் தேதி முதல் அனுமதி; அரசியல், மத கூட்டங்கள் நடத்தலாம்; கடற்கரை, சுற்றுலாத்தலங்களுக்கு தடை தொடரும்; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது. வரும் 16ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுகிறது. 10ம் தேதி முதல் தியேட்டர்களும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணியில் இருந்து அக்டோபர் 31ம் தேதி (நேற்று) வரை 221 நாட்கள் வரை ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனாலும், பொதுமக்கள் வசதிக்காக பொதுபோக்குவரத்து, கடைகள் திறப்பது, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுதலங்கள், திருமண மண்டபங்கள், மால்கள் உள்ளிட்டவைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், நேற்றுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், நவம்பர் மாதம் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? மற்றும் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 28ம் தேதி (புதன்) அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் எடுத்த முடிவுகள் குறித்து தமிழக அரசு நேற்று பல்வேறு புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அதன் விளைவாக நோய் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 பேருக்கும் கீழாகவே உள்ளது.

கடந்த 28ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், 31.10.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 30.11.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது:
* பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12ம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வருகிற 16ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
* பள்ளி/கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வருகிற 16ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
* சென்னையில், தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம் நாளை (2ம் தேதி) முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபார கடைகள் மூன்று கட்டங்களாக 16.11.2020 முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* சின்னத்திரை உட்பட திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 150 பேருக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
* திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து திரையரங்குகளை திறக்க வரப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி வருகிற 10ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் வருகிற 10ம் தேதி முதல் 100 பேர் பங்கேற்கும் வகையில் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
* பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் வருகிற 10ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* திருமண நிகழ்வுகளுக்கு 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
* ஏற்கெனவே 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இன்று முதல் 60 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

* தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
* நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை.
* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழி தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
* வெளி மாநிலங்களில் இருந்து (புதுச்சேரி மாநிலம் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்பவர்களுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய் தொற்று குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகை காலங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளுக்கும் தேவைக்கேற்ப தளர்வுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தடை தொடரும்
* நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள்.
* சர்வதேச விமான போக்குவரத்து.
* வெளி மாநிலங்களில் இருந்து (புதுச்சேரி தவிர) தமிழகம் வருபவர்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும்.

Tags : extension School ,meetings ,College Opening ,tourist attractions ,beaches ,Government of Tamil Nadu , Curfew with various relaxations One month extension School, College Opening on Nov.16: Admission to theaters from 10th; May hold political and religious meetings; The ban on beach and tourist attractions will continue; Government of Tamil Nadu Notice
× RELATED மோசமான வானிலை மபியில் தங்கினார் ராகுல் காந்தி