கொரோனா தீவிரம் குறையவில்லை: கேரளாவில் 144 தடை 10 மாவட்டங்களில் நீட்டிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் தீவிரம் குறையாததால் 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த செப்டம்பர் 15க்கு பிறகு முதன்முறையாக 5 ஆயிரத்தை தொட்ட தினசரி ெகாரோனா தொற்று எண்ணிக்கை, அம்மாத இறுதியில் 10 ஆயிரத்தை நெருங்கியது. மேலும் சில மாவட்டங்களில் 1,000க்கும் மேல் புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இவ்வாறு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதை தொடர்ந்து, நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக நிபந்தனைகளை கடுமையாக தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 3 முதல் 31ம் தேதி நள்ளிரவு வரை கேரளா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவின்படி பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேரும், இறுதிச்சடங்கில் 25 பேரும் கலந்து கொள்ளலாம். கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கடைகள் வழக்கம்போல திறந்திருக்கும். அலுவலகங்கள் ெசல்வதற்கோ, பஸ் உட்பட வாகனங்களுக்காக காத்திருக்கவோ தடையில்லை. ஆனால் கடைகள் மற்றும் ஓட்டல்களில் 5 பேருக்கு மேல் அனுமதி இல்லை. அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கூடக்கூடாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் மருத்துவ தேவைகள் தவிர, பிற காரணங்களுக்காக வெளியே செல்ல முடியாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த தடை உத்தரவு இன்றுமுதல் நிறைவுக்கு வருகிறது. ஆனால் பல மாவட்டங்களில் இன்னும் நோயின் தீவிரம் குறையவில்லை. இதையடுத்து கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களில் நவம்பர் 15ம் தேதி வரையும், கோழிக்கோடு மாவட்டத்தில் 7ம் தேதி வரையும் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு நீட்டிப்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படுகிறது.

Related Stories:

>