×

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நிர்வாக அலுவலகம் பூட்டி கிடப்பதால் வருமானம் பாதிப்பு: அன்னதான கட்டணம் செலுத்த முடியாமல் பக்தர்கள் அவதி

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்று கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில். இவ்விடம் சர்வதேச சுற்றுலா தலமான விளங்குவதால் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாடு சுற்றுலா பயணிகளும் வருகை அதிகமாக காணப்படும். இக்கோயில் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது கட்டுபாடுகளுடன் கோயில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணி முதல் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலின் உள்ளே தான் நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது. இங்கிருந்துதான் கண்காணிப்பு காமிராவை இயக்குகள் கருவிகள் உள்ளன.

போன் உள்ளிட்ட கோயிலுக்கு தேவையான முக்கிய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அபிஷேகம், அன்னதானத்திற்கு பக்தர்கள் பணம் கட்டுவது இங்கு தான் நடைபெறும். தற்போது பக்தர்கள் வரும்போது கோயில் அலுவலகம் திறப்பு இல்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பக்தர்கள் அபிஷேகம் மற்றும் அன்னதானத்திற்கு பணம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோயில் வருமானமும் குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி மேலாளர் வந்து சென்ற உடனேயே அறை பூட்டப்படுகிறது. இதற்கு பக்தர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சுசீந்திரத்தில் உள்ள திருக்கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் பல முறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லையாம். கோயில் மேலாளர் இஷ்டப்படி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி கோயில் நிர்வாக அலுவலகம் குறிப்பிட்ட நேரத்தில் திறக்காததால், கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இயக்க முடியாத இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் கோயிலின் பின்புறம் உள்ள பகுதியில் சிறுநீர் கழிப்பது போன்ற அசுத்தங்கள் நடக்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் கன்னியாகுமரி திருக்கோயிலில் நிர்வாக அலுவலகத்தை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kanyakumari Bhagavathyamman ,administration office ,Devotees , Kanyakumari Bhagavathyamman temple administration office locked down, income affected: Devotees suffer from not being able to pay alms
× RELATED புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை...