×

தீபாவளி பண்டிகைக்கு காரைக்குடி கண்டாங்கி சேலை ரெடி

காரைக்குடி: காரைக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கண்டாங்கி சேலை ரகங்கள் மீண்டும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கானாடுகாத்தான், கோவிலூர் பகுதிகளில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக கைத்தறி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு கண்டாங்கி சேலைகள், தொட்டில் சேலைகள், புட்டா, கேஸ்மெசரீஸ் முதல் ரகம், ஜரிகை காட்டன் ஆகிய ரகங்களை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சேலைகளுக்கு கெட்டிச்சாயம் பயன்படுத்துவதால் 5 ஆண்டுகளானாலும் சாயம் போகாது என்பது கூடுதல் சிறப்பு.

இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழமையான மாடல் கண்டாங்கி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதில் கோர்வை சேலைகள், கூரை நாட்டு சேலைகள் போன்றவை குறிப்பிடத்தக்கது. மேலும், 300 கிராம் எடையில் புதிய சேலை மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கானாடுகாத்தானை சேர்ந்த நெசவாளர் வெங்கட்ராமன் கூறுகையில்,‘‘முக்கிய நிகழ்வுகளுக்கு செட்டிநாட்டு காட்டன் சேலைகளை உடுத்தி செல்வதை பெண்கள் கவுரவமாக கருதுகின்றனர். விலை ரூ.800 முதல் 2,000 வரை உள்ளது. கண்டாங்கி சேலை ரகங்கள் ரூ.3,000 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

தரத்தில் கொஞ்சமும் அசராமல் உற்பத்தி செய்து தருவதால் நகர்ப்புற மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. சாதாரணமாக சேலைகள் 500 கிராம் வரை இருக்கும். தற்போது 300 கிராமில் எடை குறைவாக நெய்து அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்களது சேலைகள் சென்னை, புதுச்சேரி, கோவை, மும்பை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது’’ என்றார்.

Tags : Karaikudi Kandangi Saree Ready ,Deepavali , Karaikudi Kandangi Saree Ready for Deepavali
× RELATED தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து...