அறந்தாங்கி: அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் கடந்த பல நாட்களாக கீழே தொங்கும் வயர்களால் விபத்து நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவடடம், அறந்தாங்கி நகரின் முக்கிய சந்திப்பாக கட்டுமாவடி முக்கம் விளங்குகிறது. நகரின் முக்கிய வர்த்தக பகுதிகளுக்கு செல்ல கட்டுமாவடி முக்கம் வழியாகவே செல்ல வேண்டும். மேலும் இப்பகுதியில் 2 பெட்ரோல் பங்குகள் உள்ளதால், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டுமாவடி முக்கத்தை கடந்து செல்கின்றன. இந்த நிலையில் கட்டுமாவடி முக்கம் பகுதியில் சாலை ஓரத்தில் கடந்த பல நாட்களுக்கு முன்பு வயர் ஒன்று உயரத்தில் கட்டப்பட்ட கட்டு அவிழ்ந்து, வயர் சாலையின் ஓரம் தொங்குகிறது. சாலையின் ஓரத்தில் கீழே தொங்கும் வயரில் அவ்வழியே வாகனங்களில் செல்வோர் சிக்கி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.