இடியும் நிலையில் கலையரங்க மேடை: சீரமைக்க கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கலையரங்க மேடையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரெங்கசமுத்திரம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. இந்த கிராமத்தில் விசேஷ காலங்கள் மற்றும் கோயில் திருவிழா காலங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கலையரங்க மேடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று கலையரங்க மேடை அமைக்கப்பட்டது. பின்னர் கடந்த 2014ல் இந்த கலையரங்கம் புணரமைக்கப்பட்டது. ஆனால் உரிய பராமரிப்பில்லாததால், இந்த கலையரங்க மேடை தூண்கள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், ‘‘இந்த கலையரங்க மேடையின் படிக்கட்டுகள் மற்றும் மேற்கூரை பகுதி சேதமடைந்துள்ளதால், விழா காலங்களில் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் தங்களது கிராமத்திற்கு புதிய கலையரங்க மேடை அமைத்து தர வேண்டும்’’ என்றனர்.

Related Stories: