குளித்தலை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரியும் நாய்கள்: நோயாளிகள் அச்சம், பீதி

குளித்தலை: கரூர் மாவட்டத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்து இரண்டாம் நிலையிலுள்ள தலைமை அரசு  மருத்துவமனை குளித்தலை ஆகும். குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், சித்த  மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத்திற்கு இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை மாவட்டத்தில் இரண்டாவது  மருத்துவமனையாக இருப்பதால் தற்போது கூடுதல் படுக்கை வசதி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.மேலும் அனைத்து வசதிகளும் உள்ள இந்த மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் வகையில் ஒப்பந்த பணியாளர்களை வைத்து தினந்தோறும்  தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தெரு நாய்கள் உலா வருவதாக தெரிய வருகிறது.

இதனால் மகப்பேறு பிரிவு பகுதியில் தாய்மார்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். தெரு நாய்கள் எந்நேரமும் மருத்துவமனை வளாகத்தில்  சுற்றித்திரிந்து வருவதால் குழந்தைகளையும், முதியவர்களையும் கடித்துவிடும் என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர். நோயாளிகளும் பொதுமக்களும்  பலமுறை மருத்துவமனை சுகாதார குழுவினரிடம் புகார் செய்தும் எவ்வித பயனும் இல்லை. அதனால் பொதுமக்கள் நோயாளிகள் நலன் கருதி  தலைமை மருத்துவர் மருத்துவமனை வளாகத்தில் அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: