×

பென் ஸ்டோக்ஸ் மதிப்புமிக்க வீரர்: கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 50வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிறிஸ்கெய்ல் 63 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சருடன் 99 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். கே.எல்.ராகுல் 46(41பந்து), பூரன் 22 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென்ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் 186 ரன் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் 26 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்னும்,

உத்தப்பா 23 பந்தில் 30 ரன்னும் எடுத்தனர். சஞ்சு சாம்சன் 25 பந்தில் 48 ரன்னில் ரன்அவுட் ஆனார். ஆட்டம் இழக்காமல் ஸ்மித் 31 (20பந்து), பட்லர் 22 ரன் (11பந்து) அடிக்க 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் எடுத்த ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 13வது போட்டியில் 6வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் தொடர்ச்சியாக 5 போட்டியில் வெற்றிக்கு பின் தோல்வியை சந்தித்தது. வெற்றிக்கு பின் ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் கூறியதாவது: நடுவில் ஒருசில போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பிளே ஆப் வாய்ப்பை உருவாக்க இன்னும் நாம் கொஞ்சம் சிறப்பாக செயல்படவேண்டும். யார் வெளியேறிய பிறகு யார் உள்ளே செல்வது என்பது குறித்து எங்களுக்கு வெவ்வேறு திட்டங்கள் உள்ளன. தொடக்க வீரராக பட்லர் சிறப்பாக ஆடாததால் 5வது வரிசையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் நன்றாக ஆடினார். இது நல்ல அறிகுறி. சாம்சன் ரன்-அவுட் துரதிர்ஷ்டவசமானது, ஸ்டோக்ஸ் சிறந்த வீரர். பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் தனது வேலையை செய்கிறார். அவர் ஒரு மதிப்புமிக்க வீரர். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர், என்றார். பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்வது முக்கியமானது.

ஏனெனில் பனியில் 2வது பேட்டிங் செய்வது எளிது. பந்து வீச்சாளர்கள் பனியால் பந்தை பிடித்து வீச சற்று கடினமாக இருந்தது. நாங்கள் மோசமாக பந்து வீசினோம் என்று நினைக்க வேண்டாம், ஆனால் ஈரமான பந்துடன் சிறப்பாக பந்துவீச கற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ் கெய்ல் சரியாக பேட்டிங் செய்தார். சீசனில் எதுவும் சுலபமாக வரவில்லை. ஒவ்வொரு கட்டத்திற்கும் நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது, என்றார். ஆட்டநாயகன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: தற்போதைய நிலையில் இழக்க ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன். நாங்கள் இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. சிக்சர்கள் எப்போதும் மகிழ்வளிக்கும். மும்பைக்கு எதிராக ஆடிய அதே மனநிலையில் ஆடினேன், என்றார்.

ரன் குவிப்பில் ராகுல் டாப்
நடப்பு சீசனில் கே.எல்.ராகுல் 13 போட்டிகளில் 641 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆரெஞ்ச் தொப்பியை தக்க வைத்துள்ளார். தவான் 471, வார்னர் 436 ரன்னுடன் அடுத்த இடத்தில் உள்ளனர். மேலும் ஐபிஎல் தொடர் 2வது முறையாக ஒரு சீசனில் (2020, 2018) 600 பிளஸ் ரன்களை ராகுல் குவித்துள்ளார். இதற்கு முன் கோஹ்லி 2013, 2016ல் 600பிளஸ் ரன் அடித்துள்ளார். பந்துவீச்சில் ரபாடா இதுவரை 12 போட்டியில் 23 விக்கெட் எடுத்து பர்பி தொப்பியை வைத்துள்ளார். பும்ரா, ஷமி தலா 20 விக்கெட் எடுத்து அடுத்த இடத்தில் உள்ளனர்.Tags : Ben Stokes Valuable Player ,Steve Smith Praise , Ben Stokes Valuable Player: Captain Steven Smith Praise
× RELATED காலே கிளேடியேட்டர்ஸ் கேப்டனாக ஷாகித் அப்ரிடி