காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவராகிறார் ராகுல் காந்தி?.: டிசம்பருக்குள் காங். செயற்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியை தேர்வு செய்ய அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு வகித்துவந்தார். ஆனால் கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவை தொடர்ந்து கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார்.

ஏற்கனவே கட்சி தலைவராக இருந்த சோனியா காந்தி 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்று, அந்த பொறுப்பில் நீடித்து வருகிறார். அடுத்த 6 மாதத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவர் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அடுத்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் மீண்டும் ராகுல் காந்தியையே அகில இந்திய தலைவராக தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

இதற்கான கூட்டம் இந்த ஆண்டு இறுதிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ நடைபெற என தெரிகிறது. கட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் ராகுல் காந்தியின் பங்களிப்பு பெருமளவு இருப்பதால், ராகுல் காந்தி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவது, சம்பிரதாயமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories:

>