லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை...!! தமிழகத்தில் ஒரு மாதத்தில் 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் ஒரு மாதத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தினமும், அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாத தொடக்கத்தில் இருந்து, கிட்டத்தட்ட 1 மாத காலம் 35 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதில் சார்பதிவாளர் அலுவலகங்களில் தான் அதிக சோதனை நடந்துள்ளது. 13 சார் பதிவாளர் அலுவலகங்கள் சோதனையை சந்தித்துள்ளது. வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல அலுவலகத்தில் அதிகபட்சமாக ரூ.33 லட்சத்து 73 ஆயிரம் கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் சிக்கியது. வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல அதிகாரி பன்னீர்செல்வம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 450 பவுன் தங்க நகைகளும் 6½ கிலோ வெள்ளி பொருட்களும் அங்கு சிக்கியது. சோதனை நடத்தப்பட்ட 35 அரசு அலுவலகங்களிலும் ரூ.4.12 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.

சென்னையில் நீலாங்கரை, பம்மல், குன்றத்தூர், செங்குன்றம் ஆகிய இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. வில்லிவாக்கத்தில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி நிர்வாக பொறியாளர் அலுவலகம், அடையாறு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீபாவளியையொட்டி அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டை அதிகமாக இருக்கும் என்பதால் தொடர்ந்து சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு இயக்குனர் ஜெயந்த் முரளி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: