பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒண்றிணைய வேண்டும்..!! அதனால் யாரும் பயனடைய முடியாது; பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒண்றிணைய வேண்டும், பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனடைய முடியாது என்று குஜராத்தில் சர்தார் பட்டேல் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார். வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை அமைக்க பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் பட்டேலுக்கு குஜராத்தின் கெவாடியா நகரில் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.  ஒற்றுமைக்கான சிலை என்ற பெயருடன், 182 மீட்டர் உயரத்துடன் உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையையும் இந்த சிலை பெற்றுள்ளது.

பட்டேலின் பிறந்த தினத்தினை முன்னிட்டு அவருக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  டெல்லியில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். இதேபோன்று, குஜராத்தின் கெவாடியா நகரில் அமைக்கப்பட்ட ஒற்றுமைக்கான சிலையின் காலடியில் பிரதமர் மோடி பால் ஊற்றி, மலர்களை தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.  இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது; பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒண்றிணைய வேண்டும், பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனடைய முடியாது.

புல்வாமா தாக்குதல் பற்றி பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் அமைச்சர்ஒப்புக் கொண்டார், இது சம்பவம் தொடர்பாக அரசியல் செய்தவர்களின் உண்மையான முகங்களை அம்பலப்படுத்தியுள்ளது. புல்வாமா தாக்குதலின் போது பாதுகாப்புப் படையினர் தியாகம் செய்ததில் சிலர் வருத்தப்படவில்லை என்பதை நாடு ஒருபோதும் மறக்காது. அந்த நேரத்தில், எதிர்க்கட்சிகள் அரசியல் மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள். தேசத்தின் நலனுக்காக இதுபோன்ற அரசியலை செய்ய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இன்று, உலகின் அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாரும் பயனடைய முடியாது. இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>