×

வெங்காயம், உருளைக்கிழங்கு விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை..!! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லி: வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, வெளிநாடுகளில் இருந்து மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்கு முன்பு வந்து சேரும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறினார். வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உரிய நேரத்தில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எகிப்து, ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதிக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. அதையடுத்து, தனியார் வர்த்தகர்கள் இதுவரை 7 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளனர். மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம், தீபாவளிக்கு முன்பு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், சம்பா பருவ வெங்காயம், அடுத்த மாதம் மண்டிகளுக்கு வந்து சேரும். இதனால், வெங்காயம் வரத்து அதிகரித்து, விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். இதுதவிர, ‘நபெட்’ என்ற கூட்டுறவு அமைப்பும் வெங்காயத்தை இறக்குமதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மத்திய தொகுப்பில் உள்ள வெங்காயத்தை வெளிச்சந்தைக்கு அனுப்பி வருகிறது. பதுக்கலை கட்டுப்படுத்த வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கடந்த 3 நாட்களாக வெங்காயத்தின் சில்லரை விலை கிலோ ரூ.65 என்ற ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது. இதுபோல், சில நாட்களாக உருளைக்கிழங்கின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, உருளைக்கிழங்கையும் மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. இன்னும் 2 நாட்களில் பூடானில் இருந்து 30 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு வந்து சேரும். இன்னும் 10 லட்சம் டன் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்யப்போகிறோம். இதனால் அதன் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.

Tags : government ,Piyush Goyal , Federal government to control onion and potato prices .. !! Union Minister Piyush Goyal
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...