எளாவூர் சோதனைச்சாவடியில் 1.5 டன் செம்மரக்கட்டைகள், மினிலாரி பறிமுதல்: இருவர் கைது

கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனைசாவடியில் 1.5 டன் செம்மரக்கட்டைகள் கடத்தி சென்ற மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.  கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக தினமும்  ஆந்திரா, பீகார், ஒரிசா, மகாராஷ்டிரா, டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் செல்லும்.   இதற்கிடையில் கடந்த சில நாட்களாக ஆந்திராவிலிருந்து கார், இருசக்கர வாகனங்களில் கஞ்சா,செம்மரக்கட்டைகள் தொடர்ந்து  கடத்தி வருவதாக புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின்பேரில் சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் உள்ளிட்ட காவலர்கள் எளாவூர் சோதனைச்சாவடியில் நேற்று காலை முதல் மாலை முழுவதும் கார், இருசக்கர வாகனங்களை  ஒவ்வொன்றாக தீவிரமாக சோதனை நடத்தினர்.

அப்போது சுமார் நேற்று மாலை ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி தமிழ்நாடு பதிவு கொண்ட மினிலாரி ஒன்று எளாவூர் சோதனைச்சாவடியை வேகமாக கடக்க முயன்றது. அந்த வகானத்தை சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் இருசக்கர வாகனத்தில் சென்று 2  கிலோமீட்டர் தொலைவில் மடக்கிப் பிடித்தார். அதில் சுமார் 1.5 டன் செம்மரக்கட்டைகள் இருந்தது. விசாரணையில், செம்மரக்கட்டைகளை கடத்தியது ஆந்திர மாநிலம்  சித்தூர் மாவட்டம் ரவி (25), டிரைவர், காளஹஸ்தி பகுதியை சேர்ந்த வெங்கய்யா (26) என தெரியவந்தது.  இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர்.  செம்மரக்கட்டை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எங்கு கொண்டு செல்லப்படுகிறது என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட லாரி, செம்மரக்கட்டைகள் வனத்துறை அதிகாரி சுரேஷிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: