விசா, பாஸ்போர்ட் இல்லாமல் தங்கிய வங்கதேச தீவிரவாதி கைது? மத்திய உளவுத்துறை போலீசார் அதிரடி

ஆவடி: விசா, பாஸ்போர்ட் இல்லாமல் ஆவடி அருகே தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்த வங்கதேச நாட்டை சேர்ந்த வாலிபரை மத்திய உளவுத்துறை போலீசார் கைது செய்தனர். மேலும், இவர், தீவிரவாத செயலில் ஈடுபட வந்தாரா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு  கிராமத்தில் வங்கதேச நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் தங்கியிருப்பதாக சென்னையில் உள்ள மத்திய உளவுத்துறை போலீசாருக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  அப்போது, அங்கு ஒரு கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சில வாலிபர்களை பிடித்தனர். தீவிர விசாரணையில், ஒருவர் வங்கதேச நாட்டைச் சேர்ந்த பாட்சா (22) என்பது தெரியவந்தது. பின்னர், உளவுத்துறை போலீசார் அவரை ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

இவர், கடந்த 2015ம் ஆண்டு வங்கதேச நாட்டிலிருந்து ஆற்றுப்பாதை வழியாக தப்பி மேற்கு வங்காளத்திற்கு வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து ரயில் மூலமாக கர்நாடக மாநிலம், பெங்களூரு மற்றும் தமிழ்நாட்டில் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி  கூலி வேலை செய்து உள்ளார். அதன்பிறகு, கடந்த 2 மாதத்திற்கு முன்பு சென்னைக்கு வந்துள்ளார்.  ஆவடி அருகே ஆரிக்கம்பேடு பகுதியில் வடமாநிலத்தவர் என கூறிக்கொண்டு கட்டிட பணியில் ஈடுபட்டுள்ளார். இவரிடம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இல்லை. மேலும் பாட்சா, தீவிரவாத செயலில் ஈடுபட சென்னைக்கு வந்துள்ளாரா அல்லது பிழைப்பு தேடி வேறு வழியில்லாமல் கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே வங்கதேச வாலிபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: