×

வட்டிக்கு வட்டி ரத்து திட்டத்தில் விவசாயிகளை கழற்றி விட்டது மத்திய அரசு: பயிர், டிராக்டர் கடனுக்கு சலுகை கிடையாது

புதுடெல்லி: மத்திய அரசு அறிவித்த வட்டிக்கு வட்டி சலுகை, பயிர் மற்றும் டிராக்டர் கடன்களுக்கு பொருந்தாது என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், அந்தச் சலுகையை பயன்படுத்தி கடன் தவணையை செலுத்தாத 6 மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்பட்டது.  இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. அதோடு, சலுகையை முழுவதுமாகவோ, சில மாதங்களுக்கோ பெற்று தவணையுடன் வட்டிக்கு வட்டி தொகையை செலுத்தியவர்களுக்கு தனி வட்டிபோக, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கூட்டு வட்டித் தொகை நவம்பர் 5ம் தேதிக்குள் கடன் தவணை செலுத்தியவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சகம் யார், யாருக்கு இந்த சலுகை கிடைக்கும் என கேள்வி-பதிலை கடந்த 26ம் தேதி வெளியிட்டது.  சலுகைத் தொகை பெறும் திட்டத்தில், ‘கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வேறுபாடு’ என்ற இந்த கேள்வி பதிலில் மேலும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், ‘கொரோனா ஊரடங்கு காலத்தில் வேளாண் கடன் திட்டத்தின் கீழ் பயிர், டிராக்டர் கடன் பெற்றவர்கள், விவசாயக் கடன் பெற்றவர்கள் வட்டிக்கு வட்டி சலுகைக்கு தகுதியான 8 பிரிவுகளின் கீழ் வர மாட்டார்கள். எனவே, பயிர், டிராக்டர் கடன் உள்ளிட்ட வேளாண் கடன்கள் வட்டிக்கு வட்டி ரத்து சலுகை பொருந்தது.  

அதே நேரம்,  பிப்ரவரி 29ம் தேதியை கணக்கிட்டு, அன்றைய தினத்தில் இருந்து கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை வைத்திருப்பவர்களுக்கு வட்டி வட்டி ரத்து சலுகை வழங்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே, அனைத்து வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள், மத்திய அரசு கூறியதுபோல், ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி சலுகையை நவம்பர் 5ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டுமென ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
தவணை செலுத்தியவர்கள் கூட்டு வட்டியுடன் செலுத்தி இருந்தால், தனி வட்டியை மட்டும் கணக்கிட்டு கூட்டு வட்டித் தொகையை கடன்தாரர் கணக்கில் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

யார், யாருக்கு சலுகை
* சிறு, குறு தொழில் நிறுவன கடன்
* கல்விக் கடன்கள்
* வீட்டு கடன்
* வீட்டு உபயோக பொருட்கள் கடன்
* கிரெடிட் கார்டு நிலுவை
* வாகன கடன்
*  தனிநபர் கடன்
* மற்ற பிற தேவைக்கான கடன்

சலுகை பெறாதவர்களுக்கும் பலன் உண்டு
கொரோனா ஊரடங்கு காலத்திலும், மாத தவணை சலுகையைப் பெறாமல், வழக்கம் போல் அனைத்து மாதத்திலும் தவணை செலுத்தியவர்களுக்கும் சலுகை அளிக்கப்பட உள்ளது. அவர்களுக்கு கூட்டு வட்டிக்கு இணையான தொகை கேஷ்பேக்காக திருப்பி தரப்படும். இந்தத் திட்டத்தால் மத்திய அரசுக்குக் கூடுதலாக ரூ.6,500 கோடி செலவாகும்.



Tags : Government , Govt slashes farmers in interest waiver scheme: No concession on crop, tractor loans
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்