மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் முன்பே அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும்: பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் பேட்டி

சாயல்குடி:  ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா, 58வது குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தேவர் திருமகனார் தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவர் பிறந்தநாளும், நினைவுநாளும் ஒரேநாள். இந்த அதிசயம் வேறு யாருக்கும் கிடைக்காது. இவர் அபூர்வ சக்தி கொண்ட மனிதர். விடுதலை போராட்ட காலத்தில் தன்னை முழு மனதுடன் ஈடுபடுத்திக் கொண்டவர். விடுதலை போராட்டத்திலும், தமிழ் மொழி மீதும் அளவு கடந்த மதிப்பு வைத்திருந்தார். ஏழை, எளியோர் விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, அதற்காக பல்வேறு தொண்டு செய்து, தோள் கொடுத்துள்ளார். அவரது நினைவிடத்தில் திமுக சார்பில் ஆண்டுதோறும் வந்து மரியாதை செலுத்தி வருகிறோம்.

அக்.29ல் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை வழங்க வேண்டுமென திமுக குரல் கொடுத்தது. பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். இதனைத்தொடர்ந்துதான் சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  மசோதா நிறைவேற்றும் முன்பே அரசு பள்ளி  மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அரசாணையை  அதிமுக அரசு வெளியிட்டிருக்க வேண்டும். இந்த ஆணையின் மூலம் இவ்வாண்டே மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொது வாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முகநூல் பதிவின் விவரம் வருமாறு:

பசும்பொன் தேவரின் 113வது ஜெயந்தியை முன்னிட்டும், 58வது குரு பூஜையை முன்னிட்டும் பசும்பொன் வந்து மரியாதை செலுத்தியிருக்கிறேன். நாட்டு விடுதலைக்காகப் போராடிய தேவர், தமிழ்மொழி மீது ஆழமான பற்றுக் கொண்டவர். தமிழ்மொழி, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமை, பொதுவாழ்வில் நேர்மை போன்றவற்றிற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் தேவர் பெருமகனார். திமுக ஆட்சியில் இருந்தபோது பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நினைவிடம் அமைக்கப்பட்டது. தேவர் பெயரில் அரசு கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மதுரையில் 13 அடி உயரத்திற்கு தேவர் சிலை அமைக்கப்பட்டது. இளைஞர்களின் அன்பைப் பெற்ற தேவர் பெருமகனார் புகழ் வாழ்க, வளர்க, அவர் காட்டிய பொது வாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்.

Related Stories: