தமிழகம் முழுவதும் நடைபெறும் பாஜவின் ‘வெற்றிவேல்’ யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் திருமாவளவன் புகார்

சென்னை: தமிழக டிஜிபி அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பாஜ சார்பில் நடத்தப்படவுள்ள ‘வெற்றிவேல் யாத்திரை’ தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளதா என்ற ஐயம் எழுந்துள்ளது. எனவே, இதற்கு தமிழக காவல் துறை அனுமதியளிக்க கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை பாஜவும், அதன் ஆதரவு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளன. இப்போது ‘வெற்றி வேல் யாத்திரை’ என்ற பெயரில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை ஒரு மாத காலத்திற்கு பரப்புரை பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.

அரசியல் ஆதாயத்திற்காக மக்களை பிளவுப்படுத்தி மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு திட்டமிடப்பட்டுள்ள பாஜவின் வெற்றி வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் இதுவரை தமிழக காவல்துறை எடுத்த முயற்சிகள் எல்லாமே பயனற்றதாகிவிடும். எனவே வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:வேல் யாத்திரை மூலம் சாதி, மத வெறியை தூண்டி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜவும் இந்துத்துவ சக்திகளும் முயற்சி செய்கின்றன. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் வட மாநிலங்களில் எப்படி ஆட்சியை கைப்பற்றினார்களோ அதேபோல தமிழகத்தில் இந்த உத்தியைக் கையாளுகிறார்கள். சாதிவெறியை தூண்டும் அசுவத்தாமன், எச்.ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய எனது பெயரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் ஒரு பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலையில் பாஜவினர் செயல்பட்டு வருகின்றனர். நடிகர் ரஜினி நல்ல முடிவை எடுத்திருக்கிறார். அவர் உடல் நலத்தோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சாதி, மத அரசியலில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகாமல் நலத்தோடும், வளத்தோடும் ரஜினி இருக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார். அதேபோல் பாஜ பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் மற்றும் பாஜ வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் பால் கனகராஜ் ஆகியோர் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் ‘வெற்றி வேல் யாத்திரை’க்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.

Related Stories: