மூலிகை தாவரங்கள், 5 லட்சம் மரங்களுடன் குஜராத்தில் ஆரோக்கிய வனத்தை திறந்து வைத்தார் மோடி: ஒற்றுமை சிலையை பிரபலமாக்க மேலும் 17 திட்டங்கள்

கவாடியா: குஜராத்தில் சர்தார் வல்லபாய் சிலை அருகே 5 லட்சம் மூலிகை மரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். படேல் சிலை அமைந்துள்ள சுற்றுலா பகுதியை மேலும் வளர்ச்சி அடையச் செய்ய 17 திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். குஜராத்தில் நர்மதா மாவட்டம் கவாடியா கிராமத்தில், சர்தார் வல்லபாய்  படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ‘ஒற்றுமையின் சிலை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை, இந்தியாவின் மிகப்பெரிய சிலையாகும். நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியிருக்கும் படேல் சிலையை சுற்றி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் 17 திட்டப் பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று காலை அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.  

கொரோனா பாதிப்புக்குப் பிறகு முதல் முறையாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு வந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து காந்தி நகர் சென்ற பிரதமர் மோடி, நேற்று முன்தினம் இறந்த குஜராத் முன்னாள் முதல்வரும், பாஜவின் மூத்த தலைவருமான மறைந்த கேசுபாய் படேல் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு  ஆறுதல் கூறினார். மேலும், கொரோனாவால் சமீபத்தில் இறந்த குஜராத்தி சினிமா சூப்பர் ஸ்டார் நரேஷ் கனோடியா, அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான மகேஷ் கனோடியோ குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், சர்தார் படேலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னமான ஒற்றுமை சிலைக்கு அருகில் 17 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை மோடி திறந்து வைத்தார். இங்கு 380 வகையான 5 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆரோக்கியத்தை தரும் மருத்துவ குணமுள்ளவை.

அதோடு, தாமரை குளம், ஆல்பா தோட்டம், ஆரோமா தோட்டம், யோகா, தியான தோட்டம், டிஜிட்டல் தகவல் மையம், ஆயுர்வேத உணவுகளை வழங்கும் கேன்டீன் போன்றவை அமைந்துள்ளன. டிஜிட்டல் தகவல் மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி , பின்னர் கோல்ப் வாகனம் மூலம் வனத்தை சுற்றிப் பார்த்தார். பின்னர், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனையகமான ‘ஏக்தா மால்’ திறந்து வைத்தார். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும். அவற்றில் ஜம்மு காஷ்மீர் மாநில கைத்தறி பொருள் விற்பனை மையத்தில் சென்ற மோடி, அங்குள்ள பொருட்கள் குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்தார். இதே போல் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர் 2ம் நாளான இன்று, கவாடியாவை அகமதாபாத்துடன் இணைக்கும், நீரிலும் வானிலும் செல்லும் கடல் விமான சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

மிலாது நபி வாழ்த்து

மிலாது நபி திருநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அனைவருக்கும் மிலாது நபி வாழ்த்துக்கள். இத்திருநாள் நாட்டில் சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். ஈத் முபாரக்!’ என கூறியுள்ளார்.

23 போலீசாருக்கு கொரோனா

மோடியின் வருகையையொட்டி, படேல் சிலை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 3,651 பேருக்கு ஒருநாள் முன்பாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 23 போலீசாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Related Stories: