×

கலசபாக்கம் அருகே கட்டுமான பொருள் திருட்டை தடுக்க முயன்ற இரவு காவலாளி சரமாரி அடித்துக்கொலை: 6 பேரை பிடித்து விசாரணை

கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே சார்-பதிவாளர் அலுவலக கட்டுமான பணிக்காக வைத்திருந்த சிமென்ட் மூட்டைகள், இரும்பு கம்பிகளை திருட முயன்றவர்களை தடுத்தபோது, இரவு காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). கடலாடியில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் கட்டும் இடத்தில், கட்டுமான பொருட்களை பாதுகாக்கும் இரவு காவலராக வேலை செய்து வந்தார். நேற்று காலை சார்-பதிவாளர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஆடுதின்னான் ஏரியில், ஆறுமுகம் உடலில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆறுமுகம் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிமென்ட் மூட்டைகள், இரும்பு கம்பிகளை திருட முயன்றுள்ளனர். இதை தடுத்ததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், ஆறுமுகத்தை சரமாரியாக அடித்துக்கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, கடலாடி போலீசார் வழக்குப்பதிந்து  6 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சார்-பதிவாளர் அலுவலக கட்டுமான பணி நடக்கும் இடத்தில் உள்ள சிமென்ட் மூட்டைகள், இரும்பு கம்பிகளை, ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிச்செல்ல  முயன்றதாகவும், அவர்களை ஆறுமுகம் தடுத்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : Night guard ,Kalasapakkam , eft near Kalasapakkam: 6 arrested and interrogated
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...