×

5 கோடி சொத்தை அபகரிப்பதற்காக மகளின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகனை கொலை செய்த மாமனார்: மாயமானதாக நாடகமாடியது அம்பலம்:2 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கியது

சென்னை: 5 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிப்பதற்காக மகளின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகனை கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர்.  தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்தவர் பத்மினி (65). இவரது கணவர் சுப்புராயன். தம்பதியின் மகன்கள் செந்தில் குமார் (38), ராஜ்குமார் (35). அதிமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்த சுப்புராயன், ஒப்பந்ததாரராக வேலை செய்து படப்பையில் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கி வசதியாக வாழ்ந்தார்.மூத்த மகன் செந்தில் குமாருக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மேனகா என்பவரையும், இளைய மகன் ராஜ்குமாருக்கு பெரும்புதூரை சேர்ந்த ஆனந்தி என்பவரையும் திருமணம் செய்து வைத்துள்ளார். சொத்து தகராறில் மூத்த மகன் செந்தில்குமார், கடந்த 2014ம் ஆண்டு தம்பி ராஜ்குமாரை கூலிப்படை வைத்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சிறைக்கு சென்ற செந்தில்குமார், ஜாமீனில் வெளியே வந்த சில மாதங்களில் மாயமானார்.

அவரது மனைவி மேனகா, மாமனார் சுப்புராயனிடம் சொத்து கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதற்கு சுப்புராயன், ‘எனது மகனை காணவில்லை. அவன் எப்போது வருகிறானோ, அப்போது சொத்துகளை பிரித்து தருகிறேன்,’ என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மேனகா, தனது கள்ளக்காதலன் ராஜேஷ்கண்ணாவை வைத்து, கடந்த 2017ம் ஆண்டு சுப்புராயனை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ராஜேஷ்கண்ணா கைது செய்யப்பட்டு, சிறை சென்று, பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இளைய மகன் ராஜ்குமார் மற்றும் கணவர் சுப்புராயன் கொலையானதாலும், மூத்த மகன் செந்தில் குமார்,  மாயமானதாலும் பத்மினி மட்டும் படப்பையில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரிடம் இருக்கும் சொத்தை கேட்டு மேனகா தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இதனால், பத்மினி அயனாவரம் நாராயணன் தெருவில் உள்ள அக்கா மகள் அமுதா வீட்டிற்கு வந்து தங்கினார். கடந்த வருடம் நவம்பர் மாதம் மேனகா, ராஜேஷ்கண்ணா மற்றும் அவரது கூட்டாளிகளுடன் 2 காரில் அமுதா வீட்டிற்கு வந்து பத்மினியை அடித்து துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இதுதொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்கு பதிந்து, மேனகா, ஜேம்ஸ், பாலமுருகன், கமலா, ரோசி, தர்மலிங்கம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜேஷ்கண்ணாவை தேடி வந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் பதுங்கியிருந்த ராஜேஷ்கண்ணாவை 7 மாதங்களுக்கு பின் அயனாவரம் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: செந்தில் குமாருக்கு கார் ஓட்டுனராக வேலை செய்த ராஜேஷ்கண்ணா, ராஜ்குமார் கொலை வழக்கில் செந்தில் குமாருடன் சிறைக்கு சென்றார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தனது மனைவி மேனகாவுக்கும், கார் டிரைவர் ராஜேஷ் கண்ணாவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த செந்தில்குமார், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுபற்றி தனது மாமனார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அருணிடம் முறையிட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அருண், மகள் மேகனா மற்றும் அவளது கள்ளக்காதலன் ராஜேஷ் கண்ணாவுடன் சேர்ந்து செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூவரும், செந்தில் குமாரிடம்  நைசாக பேசி, அவரை செஞ்சிக்கு அழைத்து சென்று துண்டு துண்டாக வெட்டி கொன்று, ஒரு இடத்தில் புதைத்துள்ளனர். இறுதியாக செந்தில் குமாரின் தாயார் பத்மினியை கொன்று அவரிடம் உள்ள சொத்துகளை அபகரிக்க  திட்டமிட்டுள்ளனர். ஆனால், அதற்குள் போலீசில் சிக்கினர். இதில், முக்கிய குற்றவாளியான ராஜேஷ்கண்ணா மட்டும் தலைமறைவானதால், 7 மாதங்களுக்கு பிறகு தற்போது பிடிபட்டுள்ளார்.இதையடுத்து, மேனகாவின் தந்தை அருணை பிடித்து விசாரித்துபோது, மருமகன் செந்தில் குமாரின் ,  சொத்தை அபகரிக்க ராஜேஷ்கண்ணா மற்றும் தனது நண்பர்களான ஹரிகிருஷ்ணன், காசிநாதன் ஆகியோருடன் செந்தில்குமாரை விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு அழைத்து சென்று கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை பெரும்புதூர் டிஎஸ்பி அருள்மணி, மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், செஞ்சி தாசில்தார் ராஜன் ஆகியோர் முன்னிலையில் சம்பவ இடத்திற்கு சென்று அருண் அடையாளம் காட்டிய இடத்தில் பள்ளம்தோண்டி செந்தில் குமார், உடலை வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தலைமறைவாக உள்ள மேனகாவை தேடி வருகின்றனர்

போலீசார் அலட்சியம்
மேனகா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது மாமியாரை கடத்தியபோது கைது செய்யப்பட்டார். அப்போது நவம்பர் 22ம் தேதி தினகரன் நாளிதழில் ₹5 கோடி சொத்துக்காக குடும்பத்தினரை கூண்டோடு கொன்ற பெண் என செய்தி வெளியிட்டது. அப்போதே, மணிமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், உடனடியாக செந்தில்  செந்தில்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்திருக்கும். ஆனால், போலீசார் அலட்சியமாக செயல்பட்டதால், தற்போது அயனாவரம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.Tags : Father-in-law ,son-in-law ,daughter-in-law , Father-in-law kills son-in-law along with daughter-in-law for embezzling Rs 5 crore property: n magical drama exposed
× RELATED சொத்து தகராறில் மருமகளை குத்தி கொன்ற...