×

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடுக்கு கவர்னர் ஒப்புதல்: எதிர்க்கட்சிகளின் போராட்டம், அரசாணை வெளியீடு, நீதிமன்ற வழக்கு என தொடர் நெருக்கடியால் முடிவு

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஒப்புதல் அளித்தார். எதிர்க்கட்சிகளின் போராட்டம், அரசாணை வெளியீடு, நீதிமன்றத்தில் வழக்கு என அடுத்தடுத்து நெருக்கடிக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 45 நாட்களாக நடந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர 12ம் வகுப்பு இறுதி தேர்வு மற்றும் நீட் தேர்விலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையை மத்திய அரசு கொண்டு வந்தது. தமிழகத்திலும் கடந்த 2 ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதனால் அரசு பள்ளியில் படித்த ஏழை, எளிய மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தாலும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளும் மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடந்த 44 நாட்களாக கவர்னர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார்.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அமைச்சர்கள் 5 பேர் குழு தமிழக கவர்னரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தது. ஆனாலும், கவர்னர் மசோதா குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதால் சில வாரங்கள் பொறுத்திருக்கும்படி அமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டார். மசோதாவுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டமும் நடந்தது. காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் கவர்னருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தன. ஆனாலும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அரசு நேற்று முன்தினம் ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், “நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 2020-21ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்” என்று கூறப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 16ம் தேதி நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்காத நிலையில், தமிழக அரசே தன்னிச்சையாக அரசாணை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் வரவேற்றனர். இந்த அரசாணையை இந்த ஆண்டே நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் தமிழக கவர்னரும் தமிழக அரசு கடந்த மாதம் 16ம் தேதி அனுப்பி வைத்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு 45 நாட்களுக்கு பிறகு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிவித்தார். இதுகுறித்து, தமிழக கவர்னர்  பன்வாரிலால் புரோகித் நேற்று மதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி  இருப்பதாவது: தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும்  ஓமியோபதி ஆகிய படிப்புகளில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு  7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவுக்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட உள்இடஒதுக்கீடு  மசோதா தொடர்பாக இந்திய சொலிசிட்டர் ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) துஷார்  மேத்தாவிடம் கருத்து கேட்டு கடந்த செப்டம்பர் 26ம் தேதி கடிதம்  எழுதப்பட்டது.

அவர் அளித்த ஆலோசனைப்படி தமிழக அரசு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல்  அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கடந்த 45 நாட்களாக நடந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்து, நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் நடைபெற உள்ள மருத்துவ கவுன்சலிங்கில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டே மருத்துவ கல்லூரியில் சேர முடியும்.

கட்ஆப் மார்க் அதிகரிப்பு?
கடந்த ஆண்டு பொது பிரிவினருக்கு 520, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 360, பிற்படுத்தப்பட்டோருக்கு 470, மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 458 ஆக கட்ஆப் மதிப்பெண் இருந்தது. இந்தாண்டு 7.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும். அதேசமயம் இந்த முறை 500க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதிகமாக உள்ளதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய 7.5% இடஒதுக்கீடு போக மீதமுள்ள இடத்துக்கான கட்ஆப் மதிப்பெண்ணை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 70 முதல் 100 மதிப்பெண்கள் வரை கட்ஆப் உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது நாளை (திங்கள்) நீதிமன்ற விசாரணைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.Tags : Governor ,government school students , Governor approves 7.5% quota for public school students in medical school: Opposition protests, government release, court case end in crisis
× RELATED ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சரின் திட்டம் திடிரென ரத்து