7.5% உள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல்: நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு.!!!

சென்னை: 7.5% உள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ,  மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின்  ஒப்புதலுக்காக  மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

45 நாட்களுக்கு மேலாகியும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனுமதிதர காலதாமதம் செய்வதால், 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. தொடர்ந்து, மத்திய அரசின்  தலைமை வழக்கறிஞர் தூஷார் மேத்தா ஆளுநருக்கு நேற்று எழுதிய கடிதத்தின் கருத்தையடுத்து, தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ - மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு சட்ட முன்வடிவுக்கு தமிழக  கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, ஆளுநருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நன்றி தெரிவிக்கும் விதமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து  பேசினார். அப்போது, உள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், சந்திப்பின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை, பள்ளிகள், திரையரங்குகள் மீண்டும் திறக்க எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆளுநரிடம் முதல்வர்  பழனிசாமி விளக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்து பேசினர்.

Related Stories:

>