தரமற்ற சாலை பணிகளால் தடம் புரளும் வாகனங்கள்; தூக்கத்தில் அதிகாரிகள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தரமற்ற சாலை பணிகளால் கனரக வாகனங்கள் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் மூலம் 636 கி.மீ சாலைகள் ரூ.611 கோடி செலவில் போடப்பட்டுடு பராமரிப்பு செய்ய 2 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கொரோனா பரவலால் நிதிப்பற்றாக்குறை நிலவினாலும் கமிஷனுக்காக மாநிலம் முழுவதும் சாலை போடும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் பல சாலைகளும் நூற்றுக்கணக்கான கோடி செலவில் போடப்படுகின்றன. குறிப்பாக கிராமப்புற சாலைகள் பல இடங்களில் அவசரகதியில் தரமற்ற வகையில் போடப்படுகின்றன. புதிதாக சாலைகள் போடும் போது சாலையோரங்களில் கிராவல் மண் அடித்து மட்டம் செய்ய வேண்டும்.

பழைய ரோடுகளை கப்பிகளை முழுமையாக அகற்ற வேண்டும். ஆனால் தற்போது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போடப்படும் சாலைகளின் இரு பகுதி ஓரங்களிலும் ஏற்கனவே அகற்றிய பழைய ரோடு கழிவுகளை போட்டு, அதன்மேல் சாலையோர கரம்பை மண்ணை போடுகின்றனர். சாலை போடும் பணிகளை கண்காணிக்க வேண்டிய நெடுஞ்சாலை முதல் ஊரக சாலை பொறியாளர்கள் வரை கையூட்டு வாங்கி கொண்டு கண்டுகொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் கனரக வாகனங்கள் சாலையோரங்களில் இறங்கினால் தடம்புரண்டு விபத்தை சந்திக்கின்றன. விருதுநகர் சிவகாசி ரோட்டிலும், புல்லாலக்கோட்டை ரோட்டிலும் இரு லாரி, வேன்கள் கவிந்து விபத்திற்குள்ளாகின. விபத்துக்களால் வாகனங்களுக்கு இழப்பு, உயிர்பலிகள் ஏற்படுவதற்கு கண்காணிப்பு அதிகாரிகளே காரணம் என சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: