×

மருத்துவ படிப்புக்கு கட்ஆப் மார்க் அதிகரிப்பு: 7.5% இடஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால் கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிப்பு.!!!

சென்னை: 7.5% ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால், மருத்துவப்படிப்பிற்கான கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு  மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக  மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. 45 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இது சம்பந்தமான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையே, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் அனுமதிதர காலதாமதம் செய்வதால், அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. தொடர்ந்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்  தூஷார் மேத்தா ஆளுநருக்கு நேற்று எழுதிய கடிதத்தின் கருத்தையடுத்து, தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ - மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால்  புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்தாண்டு பொது பிரிவினருக்கு 520, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 360, பிற்படுத்தப்பட்டோருக்கு 470, மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 458 ஆக கட்ஆப் மதிப்பெண் இருந்தது. இந்தாண்டு 7.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால்,  தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும். அதேசமயம் இந்த முறை 500க்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதிகமாக உள்ளதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீட் கிடைப்பதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய 7.5% இடஒதுக்கீடு போக மீதிமுள்ள இடத்துக்கான கட்ஆப் மதிப்பெண்ணை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 70 முதல் 100 மதிப்பெண்கள் வரை கட்ஆப் உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், 7.5% ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால், மருத்துவப்படிப்பிற்கான கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால்,  கவுன்சிலிங் விரைவில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை முடித்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கவர்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்த பிறகே  தமிழகத்தில் மருத்துவ கவுன்சலிங் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Governor , Cutoff mark increase for medical study: Counseling date to be announced soon as Governor approves 7.5% reservation !!!
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...