குளித்தலை அய்யர்மலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி; நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றான ரத்தினகிரீஸ்வரர் கோயில் குளித்தலை மணப்பாறை சாலையில் உள்ளது இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பக்தர்களும் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. மெயின் ரோட்டில் சிறிய உணவகங்கள், பேக்கரிகள், பெட்டிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் என ஏராளமான கடைகள் சாலையின் இருபுறமும் இருந்து வருகின்றன.

மேலும் நாளுக்கு நாள் பொதுமக்கள் வருகை அதிகமானதால் சாலைகளை விரிவுபடுத்த வேண்டிய சூழ்நிலையில் அனைத்து கடைக்காரர்களும் கடைகளை நெடுஞ்சாலைத்துறை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து அமைத்துள்ளனர். இந்நிலையில் சத்தியமங்கலம் ஊராட்சி மூலம் அய்யர்மலை கடைவீதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நெடுஞ்சாலை துறைக்கு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அய்யர்மலை கடைவீதி சாலை மேற்குப் பகுதியில் உள்ள கடைகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள 28ம் தேதி வரை அவகாசம் கொடுத்து உள்ளனர் தவறினால் ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலைத்துறை மூலம் அப்புறப்படுத்துவதுடன் அதற்கான செலவு தொகை தங்களிடம் இருந்து வசூல் செய்யப்படும். மேலும் நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின் பிரிவுகளின் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு கடிதம் அய்யர்மலை மேற்குப்பகுதி கடைக்காரர்களுக்கு கொடுத்துள்ளனர். அதன்படி அவர்கள் அகற்றாததால் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றினர். அப்போது அப்பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து அய்யர் மலைப்பகுதியில் பொதுமக்கள் பக்தர்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. அதனால் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் மேற்குப் பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்பை அகற்றும் காரணம் என்ன, கிழக்குப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை இல்லையே ஏன் என கேட்டனர். அதற்கு ஊராட்சி மூலம் அய்யர்மலை கடைவீதியில் இருந்து கழிவு நீர் சாக்கடை கட்ட இருப்பதால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியிருந்தனர். அதன்படி முறையாக கடிதம் கொடுக்கப்பட்டது. அதன் மூலமாகத்தான் நாங்கள் ஆக்கிரமிப்பை அகற்றினோம் என கூறியுள்ளனர். மேலும் அய்யர்மலை கிழக்குப்பகுதியில் உள்ள கடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதியில் ஊராட்சி மூலம் கழிவுநீர் சாக்கடை கட்டுவதற்கு ஏற்பாடு செய்தால் அப்போது ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இருந்தாலும் பொதுமக்கள் நாங்கள் பலமுறை மேலதிகாரிகளுக்கு அய்யர்மலை ஆக்கிரமிப்பு குறித்து கடிதம் எழுதி உள்ளோம் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. ஆனால் நீங்கள் பாரபட்சமாக மேற்கு பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றி வருகிறீர்கள் எனக் கேட்டதற்கு எவ்வித பதிலும் இல்லாமல் தங்களது பணியை செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Related Stories: