×

பயிர்க் கடன், டிராக்டர் கடன் வாங்கியவர்களுக்கு வட்டிக்கு வட்டி சலுகை கிடையாது: மத்திய நிதியமைச்சகம் திடீர் அறிவிப்பு

புதுடெல்லி, :மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்த வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) தள்ளுபடி அறிவிப்பு பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.கொரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு சலுகை அளித்திருந்தது. ஆனால், அந்தச் சலுகை காலத்தில் கடன் தவணையைச் செலுத்தாமல், ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்பட்டது. வட்டிக்கு வட்டி விதிப்பதைத் தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ரூ.2 கோடி வரை கொரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்றும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட வட்டித் தொகை நவ. 5ம் தேதிக்குள் கடன் தவணை செலுத்தியவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகையில் வீட்டுக் கடன் பெற்றவர்கள், கிரெடிட் கார்டு தவணை செலுத்தியவர்கள், சிறு,  குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற கடன், நுகர்வோர் பொருட்கள் வாங்கி தவணை செலுத்துவோர், நுகர்வோர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் ரூ.2 கோடி வரை பெற்றவர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம்  தற்ேபாது வெளியிட்ட அறிவிப்பில், ‘பிப். 29ம் தேதி கணக்கின்படி, கிரெடிட் கார்டில் பொருட்கள் வாங்கியோர், மாதத் தவணை செலுத்துவோர் தவணையுடன் கூட்டு வட்டி செலுத்தி இருந்தால், அவர்களுக்கான நிலையான வட்டி மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, கூடுதல் வட்டித்தொகை வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும்.
ஆனால், கொரோனா காலத்தில் வேளாண் கடன் திட்டத்தின் கீழ் பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்கள், விவசாயக் கடன் பெற்றவர்கள் தவணை செலுத்தும்போது வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படாது. இந்த வேளாண் கடன் பெற்றவர்கள் மத்திய அரசின் வட்டிச்சலுகை திட்டத்துக்குள் வரமாட்டார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட சலுகை ரத்து அறிவிப்பால், மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags : tractor borrowers ,announcement ,Federal Ministry of Finance ,
× RELATED அலுவலகங்கள் வெறிச்சோடின தகுதியான...