நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விதை வெங்காய ஏற்றுமதிக்கு தடை : வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தகவல்

புதுடெல்லி,:நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விதை வெங்காய ஏற்றுமதிக்கு வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தடை விதித்துள்ளது. கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காரீப் பருவத்தின் இறுதியில் பெய்த  பலத்த மழையால், வெங்காயம் சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் விளைச்சல் குறைந்ததால் கடந்த சில வாரங்களில் வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்தது. கடந்த 10 நாட்களாக வெங்காய விலை உயர்ந்ததால் பொதுமக்கள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகினர். பல்வேறு சந்தைகளில் வெங்காய சில்லறை விலை ஒரு  கிலோ ரூ.75 முதல் ரூ.140 வரை விற்கப்பட்டது.

வெங்காய தட்டுப்பாட்டை தவிர்க்க சில்லறை  விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் இறக்குமதியை  அதிகரித்தனர். மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதியை தடைசெய்தது. மேலும், வெங்காயம் கொள்முதல் செய்வதற்கும் வரம்பை விதித்துள்ளது. அதேபோல், அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து  வெங்காயம் சமீபத்தில் கைவிடப்பட்டது. சில்லறை விற்பனையாளர்கள் 20  குவிண்டால் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் 250 குவிண்டால் வெங்காயத்தை கையிருப்பில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், உள்நாட்டு சந்தைகளில் அதிகரித்து வரும் தேவையால், பயிரிடப் பயன்படுத்தும் விதைப்பு விதை வெங்காயம் ஏற்றுமதி  செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உள்நாட்டு சந்தைகளில் தேவை அதிகரித்துள்ளதால் பயிரிடப் பயன்படுத்தும் விதைப்பு விதை வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக  நடைமுறைக்கு வரும். ஏற்கனவே ஏற்றுமதிக்கு தயாராக இருக்கும் விதைப்பு வெங்காயத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வெங்காய விலை உயர்வை  கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான  விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மேலும் ஆப்கானிஸ்தான், எகிப்து  உள்ளிட்ட நாடுகளிடமிருந்து வெங்காய இறக்குமதி செய்யப்படும் எனவும் மத்திய அரசு  அறிவிப்பு வெளியிட்டது.

ஏற்கனவே, வெங்காயம் விதைப்பு விதைகளை ஏற்றுமதி செய்வது தடைசெய்யப்பட்ட பிரிவில்  இருந்தது. அதாவது, ஏற்றுமதியாளர்கள் அரசாங்கத்திடம் உரிமம் அல்லது  அனுமதி பெற்ற பின்னரே ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். தற்போதைய உத்தரவால், விதைப்பு வெங்காயம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>