×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் கடைகளில் விற்பனைக்கு குவிந்த ஜவுளிகள்; அடுத்த மாதம் சுறுசுறுப்படையும் என வியாபாரிகள் நம்பிக்கை

சேலம்: ஆயுதபூஜைக்கு பிறகு ஜவுளிக்கடைகளில் ஜவுளிகள் தீபாவளி விற்பனைக்காக குவிக்கப்பட்டு வருகிறது. நவம்பர் 3ம் தேதிக்கு மேல் விற்பனை சுறுசுறுப்படையும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். தமிழகத்தில் திருப்பூரில் பனியன், உள்ளாடைகளும், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டன் ஏற்றுமதி ரகங்கள், லுங்கி, அபூர்வா சேலை, கேரளா வேஷ்டி, சேலைகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் உற்பத்தியாகும் ஜவுளிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதை தவிர வட மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல் வட மாநிலங்களான குஜராத், கொல்கத்தா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெண்களுக்கான தேவையான சேலை, சுடிதார், குழந்தைகளுக்கான டிரஸ், ஆண்களுக்கான பேண்ட், சர்ட்ஸ் ஜவுளிகள் மற்றும் ஜீன்ஸ் பேண்ட், ரெடிமேடு ஆடைகள் தமிழகத்திற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜவுளி விற்பனை களை கட்டும்.

இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே ஜவுளி வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்து, தீபாவளி பண்டிகைக்கு இரு வாரத்திற்கு முன்பு விற்பனைக்கு குவித்து வைப்பார்கள். இந்த நிலையில் நடப்பாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து தொழில்களை முடக்கி போட்டுள்ளது. இதன் காரணமாக பல தொழில்கள் இன்னும் சுறுசுறுப்படையாமல் உள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் ஜவுளி கடைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. ஆனால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. இந்த நிலையில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 17 நாட்களே இருக்கும்பட்சத்தில் தீபாவளி விற்பனைக்காக கடந்த ஆயுதப்பூஜை பிறகு வியாபாரிகள் ஜவுளிகளை விற்பனைக்கு குவித்து வருகின்றனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு பல கோடி மதிப்பிலான ஜவுளிகள் விற்பனையாகி வருகிறது. இதில் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்பட முக்கிய பண்டிகை நாட்களில் வழக்கத்தைவிட நூறு சதவீதம் வியாபாரம் அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு முன்பே வழக்கமான பகுதிகளில் இருந்து மொத்தமாக ஜவுளிகளை கொள்முதல் செய்து, ஆயுதபூஜைக்கு பிறகு புதிய ஜவுளிகளை விற்பனைக்கு வைப்போம்.

இவ்வாறு விற்பனைக்கு வைக்கப்படும் ஜவுளிகளில் 75 சதவீதம் விற்றுவிடும். வழக்கமாக தீபாவளி பண்டிகையை கழித்து முகூர்த்தங்கள் அதிகளவில் வரும். மீதமுள்ள ஜவுளிகளும் முகூர்த்த காலக்கட்டத்தில் விற்றுவிடும். நடப்பாண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், கார்மெண்ட்ஸ் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. இந்த 2 மாதமும் பல கோடி மதிப்பிலான ஜவுளிகள் உற்பத்தி இல்லாமல் போனது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், நடப்பு அக்டோபர் மாதங்களில் வட மாநிலங்களில் ஜவுளி உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே இருப்பில் உள்ள ஜவுளிகள், தற்போது புதிதாக உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் அவ்வப்போது விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனால் கடைகளில் தீபாவளி விற்பனைக்காக புதிய ஜவுளிகள் குவித்து வருகின்றனர். தற்போது 20 சதவீதம் வியாபாரம் நடந்து வருகிறது. வரும் நவம்பர் 1ம் தேதி அரசுத்துறை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். அதனால் நவம்பர் 3ம் தேதிக்கு மேல் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Tags : shops ,Salem ,Traders ,Deepavali , Textiles on sale in Salem shops ahead of Deepavali; Traders hope to be active next month
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி