அமராவதி கடைமடைக்கு நீர் வராததால் மக்காச்சோள பயிர்கள் காய்கின்றன

உடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து செல்லும் பிரதான கால்வாயில், கிருஷ்ணாபுரத்தில் 17/7 கிளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடைமடையான இப்பகுதிக்கு அமராவதி தண்ணீர் வராததால் பயிர்கள் கருகி வருகின்றன. இதுவரை சுமார் 300 ஏக்கரில் மக்காச்சோள பயிர்கள் காய்ந்துவிட்டன. மடத்துக்குளம் தாலுகா வேடப்பட்டியில் விவசாயி நித்யானந்தம் 3 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.

தண்ணீர் இல்லாமல் அவை காய்ந்துவிட்டன. இதுபற்றி நித்யானந்தம் கூறியதாவது: ஒவ்வொரு முறை தண்ணீர் திறக்கும்போதும், இப்பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை. இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால் சரிவர பதில் அளிப்பதில்லை. புகார் தெரிவிக்க போனில் அழைத்தால் அழைப்பை ஏற்பதில்லை. அதிகாரிகள் வந்து விவசாய நிலத்தை பார்ப்பதில்லை. நமக்கு சோறுபோடும் விவசாயத்தை மதிக்காவிட்டால் உணவுக்கு திண்டாட்டம் ஏற்படும்.  வாய்க்கால் தூர் வாராததால்தான் இப்பகுதிக்கு அறவே தண்ணீர் வருவதில்லை. விவசாயம்தான் எனக்கு வாழ்வாதாரம். பயிர்கள் கருகினால் மருந்து குடிப்பதை தவிர வேறு வழியில்லை. பயிர் காப்பீடு செய்தும் எந்த பலனும் இல்லை. எனவே, மன உளைச்சலில் வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: