அழியும் அபாயத்தில் பாத்திர தொழில்; மாற்றுத்தொழிலை நாடும் தொழிலாளர்கள்

தொழிலாளர் பற்றாக்குறை, மூலப்பொருட்களின் விலை உயர்வு, கூலி உயர்வு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அனுப்பர்பாளையத்தில் பாத்திர தொழில் நசிவடைந்து அழியும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திருப்பூர் என்றாலே பனியன் தொழில்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அடுத்ததாக அனுப்பர்பாளையம் பாத்திர தொழில் இந்திய அளவில் பிரசித்தம் பெற்றது. இது ஒரு பாரம்பரிய தொழில் ஆகும். தற்போது அனுப்பர்பாளையம் பகுதியில் 150க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகளில் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு எவர் சில்வர், பித்தளை, செம்பு பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுக்கு முன்பு கொடிகட்டி பறந்த இத்தொழில் தற்போது, ஆட்கள் பற்றாக்குறை, மூலப்பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பின்மை ஆகிய காரணங்களால், அழிவுப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது.

15 ஆண்டுக்கு முன்பு அனுப்பர்பாளையம், அனுப்பர்பாளையம் புதூர், ஆத்துப்பாளையம், அம்மாபாளையம், பள்ளிபாளையம், அங்கேரிபாளையம் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பட்டறைகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாத்திர தொழிலாளர்கள், பனியன் தொழில் உள்ளிட்ட பிற தொழிலுக்கு செல்ல துவங்கி உள்ளனர். இதனால் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக குறைந்ததோடு, பட்டறைகளில் எண்ணிக்கையும் 150 ஆக குறைந்துள்ளது. இத்தொழில் இந்த அளவுக்கு நசிவு அடைய முக்கிய காரணம், பாத்திர தொழிலில் சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லாதது தான் என கூறப்படுகிறது. இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பிராவிடண்ட் பண்ட் என எந்தவிதமான சலுகையும் கிடையாது. தங்களுக்கும், தங்களது குடும்பங்களுக்கும் பாதுகாப்பு இல்லாததால், பரம்பரை தொழிலான பாத்திர தொழிலை விட்டுவிட்டு மாற்றுத்தொழிலான பனியன் தொழிலுக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது. தற்போது இத்தொழிலில் வயதான தொழிலாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பிள்ளைகளை இத்தொழிலில் ஈடுபடுத்தாமல் பிற தொழிலுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் பாத்திர தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்து, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களிலிருந்து ஆட்களை அழைத்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திருமண சீர் வரிசைக்கு பாத்திரங்களை அடுக்கி வைத்த நிலை மாறி, இன்று அந்த இடத்தை, பிளாஸ்டிக், பீங்கான், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆக்கிரமித்துவிட்டன. எவர்சில்வர் பாத்திரங்களின் நுகர்வு குறைந்துவிட்டது. இதுபோன்ற பிரச்னைகளால் தேய்ந்து வரும், அனுப்பர்பாளையம் பாத்திர உற்பத்தி தொழில், மீண்டும் தலை நிமிர, அரசு உதவிக்கரம் நீண்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பாத்திர உற்பத்தியாளர்கள் கூறுகையில், இத்தொழில் 400 ஆண்டுகள் பழமையானது. அண்டா, பானை, செம்பு, அரிக்கன் சட்டி, இட்லி பாத்திரம் போன்ற குறிப்பிட்ட வகையான பாத்திரங்களே உற்பத்தி செய்யப்படுகின்றன. நவீனங்கள் புகுந்து விட்டதால் போட்டி போட முடிவதில்லை. நவீன இயந்திரங்கள் வாங்க, மானியம் மற்றும் கடனுதவியை அரசு வழங்க வேண்டும். இத்தொழிலுக்கு இளைஞர்களை ஈர்க்கும் முயற்சியாக, பயிற்சி பட்டறை அமைக்க வேண்டும். விசைத்தறி தொழிலுக்கு வழங்குவதுபோல், பாத்திர உற்பத்திக்கும், மின்சார மானியம் வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: