இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் நன்றி!

சென்னை: 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ - மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. 45 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இது சம்பந்தமான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

தமிழக அமைச்சர்கள் 5 பேர் குழுவாக சென்று கவர்னரை சந்தித்து மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது, 3 அல்லது 4 வாரத்தில் நல்ல முடிவை அறிவிப்பதாக கவர்னர் அறிவித்தார். இதற்கிடையே, நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 2019-2020ம் கல்வியாண்டில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் அனுமதிதர காலதாமதம் செய்வதால், அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

தொடர்ந்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தூஷார் மேத்தா ஆளுநருக்கு நேற்று எழுதிய கடிதத்தின் கருத்தையடுத்து, தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ - மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% #Reservation-க்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி!. திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்! என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: