×

கோவை உள்பட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று சமூக பரவலை கண்டறிய ரூ.2 கோடியில் ஆண்டிபாடி டெஸ்ட் கருவி

கோவை: கோவை உள்பட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா? என்பதை கண்டறிய உதவும் ஆண்டிபாடி டெஸ்ட் கருவி கோவை வந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்திற்கு உட்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று கண்டறிய 2 விதமான சோதனைகள் நடத்தப்படுகிறது. அதில், ஒன்று ஆர்.டி.பி.சி.ஆர், டெஸ்ட். மற்றொருன்று ஆண்டிபாடி டெஸ்ட் ஆகும். ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்டில் நம் உடலில் கொரோனா வைரஸ் இருக்கிறதா? என்பதை கண்டறிய முடியும். ஆண்டிபாடி டெஸ்ட்(சி.எல்.ஐ.ஏ.) என்பது கொரோனாவுடன் எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உள்ளதா? என கண்டறியும். மேலும், ஆண்டிபாடி சோதனைகளை விரைந்து செய்து முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். இதனால் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் மாநில சுகாதாரத்துறைக்கு ஆண்டிபாடி டெஸ்ட் மூலம் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா? என கண்டறிய அறிவுறுத்தியது.

இதையடுத்து, தமிழகத்தில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா சமூக பரவல் தொடர்பாக பொதுமக்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாநகராட்சியில் செல்வபுரம், விளாங்குறிச்சி, நஞ்சுண்டாபுரம், சாய்பாபா காலனி உள்பட 12 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் மொத்தம் 42 இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. தவிர, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தம் 5 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில், 2 ஆயிரம் மாதிரிகள் சேலத்திற்கும், 1,500 மாதிரிகள் சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சமூக பரவல் கண்டறிய சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ய கோவையை மையமாக வைத்து ரூ.2 கோடி மதிப்பிலான நவீன கருவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கருவி கோவை வந்தது. இதனை ரேஸ்கோர்ஸ் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த கிளியா கருவியின் மூலம் ஒரு மணி நேரத்தில் 160 மாதிரிகளின் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். தனிநபருக்கு கொரோனா தொற்றை கண்டறிய பயன்படுத்த முடியாது. தற்போது, கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகள் சென்னை, சேலத்திற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், புதிய கருவியை பொருத்தும் பணிகள் முடிந்தவுடன் இங்கேயே மாதிரிகள் இனி பரிசோதனை செய்யப்படும். தவிர, தையராய்டு, ஹார்மோன் குறைபாடு தொடர்பான டெஸ்ட்கள் கூட அதற்கான கிட் இருந்தால் இந்த கருவியை பயன்படுத்தி கண்டறிய முடியும்” என்றனர்.

Tags : spread ,districts ,Coimbatore , Antibody test equipment worth Rs 2 crore to detect the spread of corona infection in 5 districts including Coimbatore
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...