×

ஏலகிரி மலையில் பயன்பாட்டுக்கு வராத சலவைத்துறையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கழிவுநீர் கலப்பு; மாசடைந்த நீரில் குளிக்கும் கட்டாயத்தில் சுற்றுலா பயணிகள்

ஜோலார்பேட்டை: பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாத சலவைத்துறையால் சலவைத்தொழிலாளர்களால் வெளியேற்றப்படும் கழிவுநீர் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கலப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அச்சம் நிலவுவதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன. ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டியாக கருதப்படுகிறது. இதனால் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ஏலகிரி மலையை உள்ளடக்கிய 14 கிராமங்கள் ஏலகிரி என்ற ஒரே ஊராட்சியாக உள்ளது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களும், வெளியில் இருந்து இங்கு குடியேறியவர்களும் வசித்து வருகின்றனர். ஏலகிரி மலைவாழ் மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம், வனப்பொருட்கள் சேகரித்தல், கால்நடை மேய்த்தல் போன்றவை. அதேநேரத்தில் முக்கிய சுற்றுலாத்தலம் என்பதால் தமிழகத்தின் வடமாவட்டங்கள், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஏலகிரிக்கு வருகின்றனர். இவர்கள் தங்கி செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன.

தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் சார்பிலும், பல்வேறு துறைகளின் சார்பிலும் தங்கும் விடுதிகள் உள்ளன. விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் விடுதிகளின் துணிகளை துவைப்பதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 3 பெரிய தொட்டிகளுடன், துணிகளை துவைக்கப்பயன்படுத்தும் கல் மேடைகள் ஆகியவற்றுடன் கூடிய சலவை தொழிலாளர்களுக்கான சலவைத்துறையும், துணிகளை உலர்த்துமிடம், அவர்களுக்கான ஓய்வறைகள் ஆகியன புங்கனூர் படகுத்துறை அருகில் கட்டப்பட்டன. அதன் அருகிலேயே தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஊராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்காததால் சலவைத்தொழிலாளர்களால் பயன்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து வருகிறது. எனவே சலவைத்தொழிலாளர்கள் ஏலகிரி மலையில் ஆங்காங்கே காட்டாறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், பள்ளக்கணியூர் காட்டாறு ஆகியவற்றில் துணிகளை துவைக்கின்றனர். மேலும், சலவை தொழிலாளர்கள் மட்டுமின்றி கிராம மக்களும் தடுப்பணைகளில் குளிப்பது, துணி துவைப்பது, காலைக்கடன்களை கழித்துவிட்டு சுத்தம் செய்து கொள்வது போன்ற அனைத்தையும் செய்கின்றனர்.

இதனால் காட்டாறுகளிலும், தடுப்பணைகளிலும் தண்ணீர் மாசடைந்து, தொற்றுநோய் பரப்பும் மையங்களாக மாறியுள்ளன. இவற்றிலேயே கால்நடைகள் தாகம் தீர்த்துக் கொள்வதுடன், சில நேரங்களில் சுற்றுலா பயணிகளும் அவற்றிலேயே குளிக்கின்றனர். இவ்வாறு அசுத்தமடையும் காட்டாற்று ஓடைகள்தான் ஒன்றிணைந்து ஜலகாம்பாறையில் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இவ்வாறு மாசடைந்த நீர்வீழ்ச்சியில்தான் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போடுகின்றனர். மேலும் நீர்வீழ்ச்சி தண்ணீர் என்பதால் இது சுத்தமான மழைநீர் என்று கருதி குடிக்கவும் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் உடல்நலன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு துணிகளை துவைக்க பல லட்சம் மதிப்பீட்டில் கட்டிய சலவை தொழிலாளர்களுக்கான சலவைத்துறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து காட்டாற்று ஓடைகளையும், தடுப்பணைகளின் தூய்மையான சூழலையும், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியின் சூழலியலையும் பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jalakampara Falls ,Yelagiri Hills , Sewage mix in Jalakampara Falls due to unused laundry in Yelagiri Hills; Tourists forced to bathe in polluted water
× RELATED ஏலகிரி மலையில் குண்டும், குழியுமாக...