×

72 ரன் விளாசினார் கெயிக்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் திரில் வெற்றி: கடைசியில் 2 சிக்சர் அடித்து கலக்கிய ஜடேஜா

துபாய்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 178 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் டு பிளெஸ்ஸி, தாஹிர், மோனு குமாருக்கு பதிலாக கர்ண் ஷர்மா, லுங்கி என்ஜிடி, ஷேன் வாட்சன் இடம் பெற்றனர்.கொல்கத்தா அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக ரிங்க்கு சிங் சேர்க்கப்பட்டார். கேகேஆர் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும் முனைப்புடன் இந்த போட்டியில் களமிறங்கிய நிலையில், சென்னை அணி ஆறுதல் வெற்றியுடன் கவுரவம் காக்க வரிந்துகட்டியது.

ஷுப்மான் கில், நிதிஷ் ராணா இருவரும் கொல்கத்தா இன்னிங்சை தொடங்கினர். துடிப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 53 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது.கில் 26 ரன் எடுத்து கர்ண் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற கிளீன் போல்டானார். அடுத்து வந்த சுனில் நரைன் 7 ரன், ரிங்க்கு சிங் 11 ரன்னில் வெளியேறினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய ராணா 44 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார்.ராணா, கேப்டன் மோர்கன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்தனர். கர்ண் ஷர்மா வீசிய 16வது ஓவரில் ராணா ஹாட்ரிக் சிக்சர் விளாசி அசத்தினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 87 ரன் (61 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி என்ஜிடி வேகத்தில் கரன் வசம் பிடிபட்டார்.மோர்கன் 15 ரன் எடுத்து என்ஜிடி பந்துவீச்சில் கெயிக்வாட் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் கார்த்திக் அதிரடியாக 3 பவுண்டரிகள் அடித்து கேகேஆர் ஸ்கோரை உயர்த்த உதவினார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. கார்த்திக் 21 ரன் (10 பந்து, 3 பவுண்டரி), திரிபாதி 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சென்னை பந்துவீச்சில் என்ஜிடி 2, சான்ட்னர், ஜடேஜா, கர்ண் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. வாட்சன் 14 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் கெயிக்வாட்டுடன் ஜோடி சேர்ந்த ராயுடு அடித்து விளையாடினர். இவர்கள் 12 ஓவரில் 100 ரன் குவித்தனர். இதில் கெயிக்வாட் அதிகபட்சமாக 53 பந்தில் 72 ரன் அடித்தார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 20  ஓவரில் 178 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக கெயிக்வாட் 72 ரன் எடுத்தார். இதில் 19வது ஓவரில் 20ரன் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் ஜடேஜா அடுத்தடுத்து  2 சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

Tags : Jadeja ,victory ,Gaikwad Chennai Super Kings , Keyquad scored 72 runs Chennai Super Kings thrill win: Jadeja finally hit 2 sixes
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...