தேஜ கூட்டணி கட்சிகளே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும்: பாஜ மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி

கோவை: தேஜ கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்துதான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என பா.ஜ. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.  கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி:  மனுதர்மம் என்பது பெண்களை இழிவுபடுத்துகின்றது. பா.ஜ. மனுதர்மத்தை  பின்பற்றுகின்றதா? என்று விடுதலை சிறுத்தைகள் உட்பட  அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்கின்றனர். ஏதோ நூலில் யாரோ சொல்வதற்கும் எங்களுக்கும்  சம்பந்தமில்லை.  திருமாவளவன் அரசியலுக்காக  மனுதர்ம நூலை வைத்து பேசுகிறார். பெண்கள் குறித்து காலத்திற்கு ஒவ்வாமல்  எழுதி வைத்து இருப்பது  பெண்களுக்கு தேவையில்லை. பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரமாக  நடமாடுவதற்கு சமுதாயம், பாதுகாப்பு போன்றவையே தேவை.

குஷ்புவுக்கு பதவி வழங்கப்படாமல்  இருப்பதற்கு பெரியாரிஸ்ட் என்று சொன்னது காரணமில்லை. குஷ்புவுக்கும் கூடிய விரைவில் கட்சியில்  அங்கீகாரம் கிடைக்கும். கட்சியில் பொறுப்பு எதுவும் இல்லை என்றாலும் அவரை போராட்டங்களுக்கு  தலைமை ஏற்க பா.ஜ. அனுப்புகின்றது.  தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமையாக அ.தி.மு.க. இருக்கிறது. முதல்வர் வேட்பாளர் என்பது கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. அ.தி.மு.க.  தலைமையேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை நடத்தி இருந்தால் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு  தெளிவான முடிவு இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: