கணக்கு தாக்கல் அதிகரிப்பு ஜிஎஸ்டி வசூல் இந்த மாதத்தில் 1 லட்சம் கோடியாக உயரும்

புதுடெல்லி: ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் அதிகரித்து வருவதால், நடப்பு மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடி வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மாதத்துக்கு குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாக வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், ஜிஎஸ்டி அறிமுகம் செய்ததில் இருந்து பெரும்பாலான மாதங்கள் இந்த இலக்கு எட்டப்படவில்லை. அதிலும், கொரோனா ஊரடங்கு துவங்கியதில் இருந்து வசூல் வெகுவாக சரிந்து விட்டது. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு நேரடி வரி வருவாய் குறைந்து விட்டது. இந்த சூழ்நிலையில், மாதாந்திர கணக்கு தாக்கல் மாதந்தோறும் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மாதத்தில், கடந்த 20ம் தேதியையும் தாண்டி, தாமத கட்டணத்துடன் சேர்த்து கணக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

 இதன்படி,கடந்த 25ம் தேதி வரை சுமார் 75 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய மாதத்தின் இதே நாள் வரை தாக்கல் செய்யப்பட்ட கணக்குகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனாவால் தொடர்ந்த சரிவில் இருந்த ஜிஎஸ்டி வசூல், கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் அதிகரிக்க தொடங்கியது. கடந்த செப்டம்பரில் 95,480 கோடி ஜிஎஸ்டி வசூலானது. முந்தை ஆண்டு செப்டம்பரில் இது 91,916 ஆக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 86,449 கோடி வசூலானது.

எனவே, நடப்பு மாதத்தில் அதிக அளவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாலும், கெடு தேதிக்கு பிறகும் தொடர்ந்து கணக்கு தாக்கல் செய்யப்பட்டு வருவதாலும் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடியைத் தாண்டும் என நிபுணர்கள்,  அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: